Saturday, October 13, 2007

இராமாயணம் பற்றி அறிஞர்கள்

ஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.(சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.(பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்டமலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).


நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 228).



ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.(ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).



இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.(பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)



மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)




இராமாயணமும், மகாபாரதமும் இந்தோஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 7677).



இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)



ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).



இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.(திரு. நீலகண்ட சாஸ்திரி).இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.(சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர் 1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).


இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை கண்ணன் கதை கந்தன் கதை விநாயகன் கதை காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.(மறைமலையடிகள் அறிவுரைக் கொத்து)ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.(மறைமலையடிகள் வேளாளர் நாகரிகம் பக்கம் 61).



ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.(மறைமலையடிகள் கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பக்கம் 3334.)


இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.(திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில் மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)



புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.(வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)



இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய இராவணப் பெரியார் பக்கம் 78).



மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.(ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.(வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).



புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.(திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் பக்கம் 8)

1 comment:

ரசிகன் said...

சிந்திக்க வேண்டிய விசயம் தான்.