Thursday, January 31, 2008

தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு - தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் - வானநூல். கணியின் - வான நூல் வல்லவன். கணியர் - சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள.

கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி - சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர். சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் - இன்று பக்கம் என்பதையே - பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர்.

இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர்(தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா - காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.மேஷம் என்பதற்கு - முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி - யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும்.

சித்திரை முதல்நாள் - இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு

முத்தமிழ்ப் பேரவை விழாவில் முதல்வர் கலைஞர் உரை

சென்னை, ஜன. 30- தைத்திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத் தாண்டு என்று சட்ட ரீதியாகத் தொடங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; வட மொழிச் சொற்கள் கொண்ட 60 ஆண்டுகள் நம்முடைய காலக் கணிப்புக்குப் பயன் படாது என்று தமிழக முதல் வர் கலைஞர் குறிப்பிட்டார்.சென்னையில் நேற்று நடை பெற்ற முத்தமிழ்ப் பேரவையில் 32 ஆம் ஆண்டு இசை விழா வில் அவர் பேசும்போது இவ் வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:இதை நாங்கள் தமிழ் ஆண் டாக ஒத்துக் கொள்ள முடி யாது என்று சிலர் பத்திரிகை களிலே எழுதி இருக்கிறார்கள்; சிலர் முதல்நாளே கூட மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். சொன்னவர் யாரென்றால் ஒரு மலையாளி என்றால் சரி, ஒரு தெலுங்கர் என்றால் சரி, ஒரு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றால் சரி, ஒரு இந்திக்காரர் என்றால் சரி, சொன்னவர் ஒரு தமிழரேதான். தமிழர் என்று தான் ஒத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களே கூட இது தமிழ் ஆண்டு ஆகாது. ஏற்கனவே நமக்கு அறுபதாண்டுகள் இருக்கின் றன. அதையே பின் பற்றலாம் என்று எழுதுகின்றவர்கள், சொல்லுகின்றவர்கள் உண்டு.

திராவிடர் கழகத்தாருடைய பிரச்சார அடிப்படையிலே இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் வாயி லாக எடுத்துச் சொன்ன கருத் துக்களின் அடிப்படையில் நான் சொல்லவில்லை. நமக்கு இருக்கின்ற அறிவு, சிந்தனை அதைக் கொண்டு செய்யக் கூடிய ஆராய்ச்சி இதன் அடிப் படையில சீர்தூக்கிப் பார்த் தால், இந்த 60 ஆண்டுகள் என்ற வடமொழிச் சொற் களைக் கொண்ட இந்த ஆண் டுகள் நம்முடைய வாழ்க் கைக்கு காலக் கணிப்புக்குப் பயன்படுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.அறுபதாண்டுகளில் - பிர பவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிராஜேர்பத்தி, ஆங்கிரச, சிறீ முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக் கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்தீப, சர் வஜித்து விஜய, ஜய, மன்மதன, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி என்று தொடர்ந்து குரோதன, அட்சய என்று முடிகிறது. சரி, இந்த அறுபதாண்டு என்ற கணக்கு எப்படி என்றால் - நார தருக்கும் மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணத்திலே இருக்கிறது. நாம் ஒத்துக் கொண்டுதான் தீர வேண்டும். ஏனென்றால் புரா ணத்திலே இருப்பதால் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை சரித்திரத்திலே இருந் தால் ஒத்துக் கொள்ளத் தேவை யில்லை. இருவருக்கும் ஒரு வித மாக விபரீதமான ஆசை ஏற் பட்டது. நாம் இருவரும் ஆணும் பெண்ணுமாக மாறி, ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்று எண் ணினார்கள்! எண்ணியது தெய் வங்கள் அல்லவா? ஆகவே எண்ணியது நிறைவேறியது. அப்படி பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந் தைகள் தான் நான் இப்போது சொன்னேனே, இந்தப் பெய ருக்கு உரிய குழந்தைகள்.சரி, அது வரையில் ஒத்துக் கொள்வோம்.

ஆனால் நம்மு டைய வயதுக் கணக்குக்கு, அல் லது காலக் கணக்குக்கு அந்தக் கதை ஒத்து வருமா? அதைப் பின்பற்ற முடியுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மண்டபம் இருக்கின்ற இடம் சாதாரண மான இடமல்ல. சிந்திக்கத் தெரிந்தவர்கள் உள்ள பகுதி இது. எதையும் ஏன், எப்படி என்று தங்களுக்குள்ளாகவே கேட்டு விடை காணக் கூடிய வர்கள் நிறைந்த பகுதி இது. பொதுவாகச் சொன்னால் நிரம்பப் படித்தவர்கள் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியாக இருக் கின்ற காரணத்தால் இங்கி ருந்து அவர்களுக்கு இந்தச் செய்தி போகாவிட்டாலும், காலையிலே அவர்கள் இதை உணர முடியும் என்பதற்காகச் சொல்லுகிறேன்.

இந்த அறுப தாண்டுகள் கணக்கு - காலக் கணக்குக்கு ஒத்து வராது. எப் போது ஒத்து வருமென்றால், மனிதனின் சராசரி வயது, அந்தக் காலத்துத் தமிழனு டைய சராசரி வயது, முப்பது, நாற்பது என்றிருந்தபோது வேண்டுமானால் ஒத்துவரலாம். இப்போது 84 அய்யும் தாண்டி விட்டேன். இப்போது எப்படி அறுபதாண்டுகள் கணக்கு ஒத்து வரமுடியும். என்னைப் பொறுத்த வரையில் நான் பிறந்த ஆண்டு இப்போதுள்ள வருடக் கணக்கின்படி ரக் தாட்சி ஆண்டு, ரக்தாட்சி ஆண்டு அந்த அறுபதில் 58 வது ஆண்டு. ரக்தாட்சி, குரோதன அட்சய என்பதோடு அறுப தாண்டுகள் முடிகிறது. சரி, இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் சென்று என்னை தம்பி பாரதிராஜா போன்றவர் கள் பார்த்து நீங்கள் எந்த வருஷம் பிறந்தீர்கள், வயது என்ன என்று கேட்டால், நான் ரக்தாட்சி வருஷம் பிறந்தேன் என்று சொன்னால் அப்படி யென்றால் உங்களுக்கு வயது இரண்டு தான் ஆகிறதா? என்று கேட்பார்கள்.

எனவே ஒழுங்கான கணக்கு, சரியான கணக்கு, வருஷக் கணக்கானாலும் சரி, வயதுக் கணக்கானாலும் சரி, எந்தக் காலக் கணக்கானாலும் சரி, அது கணக்காக இருக்க முடியாது. ஆகவேதான் அந்த வட மொழி என்ற எழுத்தின் மீதுள்ள வெறுப்பால் அல்ல. அந்தக் கணக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதை நாம் விலக்கி வைக்க வேண்டி யிருக்கின்றது. அதனால்தான் தொடர்ச்சியான எண்கள் - நாம் நம்முடைய பண்பாட்டிற் கேற்ப - எப்படி ஆங்கிலேயர் கள் கிறிஸ்து பிறந்த ஆண்டு அதற்குப் பிறகு, அதற்கு முன்பு என்று வைத்திருக்கிறார்களோ, அதைப் போல நமக்கு யார்? நமக்கு யார் கிறிஸ்து? நமக்கு யார் நபி? நமக்கு யார் சிவனோ, பார்வதியோ, சைவர்கள் கணக் கின்படி பார்த்தாலும், அல்லது வேறு எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் திருவள்ளுவர் தான் நமக்கு காலக் கணக்கு.

திருவள்ளுவருக்கு முன், திரு வள்ளுவருக்குப் பின் என்ற இந்தக் கணக்கை எடுத்துத் தான் சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் யெரிலே இருந்த பெரும்புலவர் - பல புலவர் களுக்கெல்லாம் வழிகாட்டி யாக இருந்தவர் - இன்று தமிழர்களுடைய தன் மான உணர்வுக்கு அன்றைக்கு வித் திட்டவர் - தண்ணீர் பாய்ச்சி யவர். அந்த சாமி வேதாசலம் - தன்னுடைய பெயரை சாமி வேதாசலம் என்பதை, மறை மலை அடிகளார் என்று மாற் றிக் கொண்டு, தான் மாற்றிக் கொண்டால் மாத்திரம் போதா தென்று ஆண்டுகள் கணக்கை யும் மாற்றி, இனி தமிழனுடைய கலை, கலாச்சாரம் எல்லாம் தமிழிலேயே மாற வேண்டு மென்கின்ற அந்த மாற்றத் தையும் செய்த மாமனிதர்தான், மறைமலை அடிகளார்.அதனால்தான் 1967 இல் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா முதலமைச்சர், நான் பொதுப் பணித்துறை அமைச்சர். அப் போது சைதாப்பேட்டையிலே இருந்த பாலத்திற்கு - அது கட்டப்பட்ட நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டதும், நான் எழு திக் கொடுத்த பெயர் மறை மலை அடிகள் பாலம் என்ப தாகும்.

இப்படி நம்முடைய மனதிலே ஆழப் பதிந்திருக்கிற ஒரு சொல். ஒரு பெயர் மறை மலை அடிகள். அவரால் சொல்லப்பட்ட கருத்துத்தான் எடுத்துச் சொல்லப்பட்ட புதை யல்தான் - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆரம்பமா கிறது என்பது. எனவேதான் சொன்னேன். நம்முடைய சாரதா நம்பி ஆரூரான் அதற் காக வருத்தப்படத் தேவை யில்லை. நாம் பேசியிருந்தால் நம்முடைய தாத்தா பெயரை இவ்வளவு நேரம் அவர் சொல் லியிருப்பாரா என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம் என்பதை மாத்திரம் அவர்களுக்குக் கூறிக் கொள் கிறேன்.- இவ்வாறு முதல்வர் கலை ஞர் அவர்கள் உரையாற்றினார்.

Tuesday, January 29, 2008

நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி

ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.ஆதி என்கிற என் நண்பனின் நூலும் அதில் ஒன்று. அவரது அழைப்புதான் என்னை அங்கே அழைத்துச் சென்றது.

பார்வையாளனாக இருந்த என்னை.. அண்ணன் வண்ணநிலவன் அவர்கள் வராத வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம். அண்ணன் கல்யாண்ஜி அவர்களின் ஒலிக்கவிதைகள் வெளியீட்டாளனாக மேடைக்கு என்னை அழைத்துச் சென்றது.

மேடையில், தங்கைகள் கனிமொழி, தமிழச்சி, குஷ்பு, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். தம்பிகள் அய்யனார், இராம். ஆனந்த்தராசன் மேடையில் இருந்தனர்.

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு முடிந்து, கல்யாண்ஜி அண்ணன் பற்றி நான்பேசி. அண்ணன் பேசி. தமிழச்சி பேசச் சென்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள் அரங்கிற்குள் நுழைய, அவரது இயக்கத்தினர் வாழ்த்துக் குரல் எழுப்ப, தங்கை கனிமொழி, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி... இருக்கையில் அவரையும் அமரச் சொல்லி அமர்ந்தோம். அவர் வருவது தெரிந்ததும்.. முகத்தைச் சட்டென திருப்பிக் கொண்டு.. தமிழச்சியின் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தார் குஷ்பு.

இருவரும் இந்தச் சந்திப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு குஷ்புவின் அந்தப் பாவனை அருவருப்பை ஊட்டியது. திரும்பி வணக்கம் சொல்லிவிட்டால்.. தானும் வணக்கம் சொல்லவேண்டும் என்கிற மனோநிலையில், தலைவர் திருமாவளவன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார். குஷ்பு திரும்பவே இல்லை. அந்த நேரத்து திருமா அவர்களின் உளவியல் மனவலி என்னை அறுத்தது.தங்கை தமிழச்சிக்குப் பிறகு. குஷ்பு அவர்கள் பேசச் சென்றார். தான் வெளியிட்ட நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசியதைவிட.. கடந்த ஆண்டில் அவர் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியே அதிகமாகப் பேசினார். பேச்சுக்கு இடையே, தோழர் திருமாவளவன் அவர்கள் இருக்கிற மேடையிலேயே நானும் நிற்கிறேன். இதில் நான் வெற்றிபெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன் என்று கர்வமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு அவர் பேசியதுதான் தங்கை கனிமொழி நக்கீரனில் சொல்லியிருப்பதைப் போல அநாகரிகத்தின் உச்சகட்டமாக இருந்தது. ''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...''தோழர் திருமா.. வணக்கம்'' என்று கூறிய முறை இருக்கிறதே... அது தலைவர் திருமாவை மட்டுமன்று... ஒட்டுமொத்தத் தமிழர்களையே. தன் காலுக்குக் கீழ்போட்டு மேல் நிற்பதான மமதையில் கூறியதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, உலகத் தமிழர்களின் நல்லெண்ணமாக வளரும் தலைவர் திருமாவளவன் அவர்கள் வந்தபோது, குஷ்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது குறித்தோ, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது குறித்தோ, இங்கு கவலையில்லை.


அதுதான் அவருக்கு அவரது மனம் கற்றுக் கொடுத்த நாகரிகம் என்று விட்டுவிட்டோம். திரும்பிப் பார்க்காத அதே உறுதியில், வணக்கம் வைக்காத அதே திமிரில், மேடையில் வெளியிட்ட நூல்பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசாமல் எல்லாவற்றையும் மறந்து பெருந்தன்மையோடு மேடைக்கு வந்திருக்கும் ஒரு தலைவரை, வம்புக்கு இழுத்து வணக்கத்தைப் பிச்சை போடுவது போல் போட்டு, போட்டதோடு நில்லாமல், போடாவிட்டால் வழக்கு போடுவீர்கள் என்று, நக்கலான ஒரு சொல்லால் தலைவர் திருமாவை, தலைவர் திருமாவின் தலைமையின் கீழ் இயங்கும் இயக்கத்தை, அவரின் மீது உயிரையே வைத்திருக்கும் இலட்சோப இலட்சம் மக்களை ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையே இழிவு செய்த அந்த அநாகரிகச் செயல்தான் என்னைச் சடக்கென எழவைத்து கண்ணுக்கெதிரே நடக்கும் மனித நேயமற்ற இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டியது.

தன்னைத் தமிழ்நாட்டின் கருத்துருவாக்கத் தலைவியாய் ஆக்கிக் காட்டுவதாக உறுதி கொடுத்தவர்களின் முன் ஒரு முறைக்குப் பலமுறையாக ஒத்திகை பார்த்த பிறகு இங்கு வந்து அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே அவரது உரையாடல்களும், உடல் மொழிகளும் அமைந்திருந்தன. அவை, நம் தமிழனத்திற்கான மிகப்பெரிய ஆபத்துகளாக அமைவன என்பதையும் உளவியல் ரீதியாக உணர்ந்தே மேடைக்கு உந்தப்பட்டேன். தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்திவிட்ட திருப்தியில், எழுந்துபோக முயன்றவரை, அமருங்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, பேசத் தொடங்கினேன்.

இலக்கிய விழாவை இலக்கிய விழாவாகவே நடத்த வேண்டும் என்கிற நாகரிகத்தோடு நாங்கள் அனைவரும் பேசினோம். நீங்கள் அந்த மரபைவிட்டு வெளியே போய் அரசியல் பேசியதால்தான் நாங்களும் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன். அவரை வென்றுவிட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் என்ன போரா நடந்தது?அதோடு இல்லாமல், தேவையில்லாமல் அவர் வருகிறபோது, சராசரி மனிதப் பண்பாடு கூட இல்லாமல் அவமரியாதை செய்துவிட்டு,. அதற்குப் பிறகு அவரைக் கூப்பிட்டு, இந்தா வணக்கம். என்று கேவலப்படுத்துகிற உரிமையை உங்களுக்கு யார் தந்தது?


அப்படித்தான். பெரியார் திரைப்பட நூறாவது நாள் விழாவில், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவில் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன் என்று அழுது வழிந்தீர்கள்.அதற்கு முன்னதாக. செயா தொலைக்காட்சியில் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியில், நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கர் பச்சானைப் பற்றியே பேசிவிட்டு, இறுதியாக நீங்கள் இயக்கும் படத்திற்குத் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று உங்கள் தயாரிப்பாளர் கேட்டால், அதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்?Who are you? அவன் யார்? என்று கேட்டீர்கள்.ஏன் இப்படி, முரண்பாட்டின் முட்டையாக இருக்கிறீர்கள்?அவன் யார் என்கிறீர்கள்.அப்புறம்அவர் ஒளிப்பதிவில் நடிக்க முடியாததற்காக வருத்தப்படுகிறேன் என்கிறீர்கள்.

எங்கள் தலைவர் வருகிறபோது வணக்கம் வைக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்புறம் மேடைக்கு வந்து, வழக்கு போடுவீர்கள் என்பதற்காக வணக்கம் வைக்கிறேன் என்கிறீர்கள்.எங்கெங்கிருந்தோ பிழைக்க வந்தவர்களெல்லாம், இப்படி எங்கள் கலைஞர்களை, தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் கேலி பேசலாம். நக்கல் செய்யலாம். அவமானப் படுத்தலாம் என்கிற நிலையை எப்படி பொறுத்துக் கொள்வது? இந்த தமிழினம் ஏன் இப்படி அவலங்களுக்கு ஆளாகிறது?என்று என் ஆதங்கங்களைப் பதிவு செய்து, என் தம்பியின் மனைவி என்கிற முறையில் கூறுகிறேன். கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதே நேரத்தில், எம் தலைவரை எம் இனத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தேன்.

அதற்குப் பிறகுதான் குஷ்பு எழுந்து சாமியாடத் தொடங்கினார். இதெல்லாம் கேக்கறீங்க, எங்கருத்துக்கு என்ன சொல்றீங்க? அன்னைக்கு நான் வச்ச அந்தக் கருத்துக்கு என்ன சொல்றீங்க?என்று ஆவேசப்பட்டு பேச...பார்வையாளர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க..தலைவர் திருமா சென்று, குஷ்பு அவர்களைக் கொஞ்சம் ஒதுங்குங்கள், நான் பேசுகிறேன் என்று கூறி, தோழர்களை ஒற்றைச் சொல்லிலேயே அமைதிப்படுத்தி பேசத் தொடங்கினார்.

அவரது பேச்சிலும், உங்களின் கருத்துரிமையைப் பறிக்கும் உரிமை எங்களுக்கில்லை, அதே நேரத்தில் எங்களை புண்படுத்தும் உரிமையும் உங்களுக்கில்லை. ஒரு கருத்தை வைக்கும்போது அந்த இன மக்களின் மனநிலை உணர்ந்து பேசவேண்டும். அப்படிப் பேசாமல்...யார் இங்கே யோக்கியர்கள் என்று நீங்கள் பேசிய அந்தச் சொல்தான் மக்களைத் தன்னெழுச்சியாய் ஆத்திரப்பட வைத்தது. மற்றப்படி நாங்கள் பெண்களுக்கோ பெண்ணுரிமைக்கோ எதிரானவர்களல்ல.நாங்கள் பெரியாரின், அம்பேத்கரின் பிள்ளைகள் என்று பேசி முடித்தார்.


பேசி முடித்ததும், சமாதான முறையில் மறுபடியும் படம் எடுத்துக் கொண்டு, கூட்டம் கலைந்தது.ஆம். இதுதான் நடந்தது. இந்த இடத்தில், அறிவுமதியாகிய நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு.க. பிறந்த 1949-இல்தான் நானும் பிறந்தேன். கொள்கையில் கற்பு கெடாத ஒரு தி.மு.க. செயலாளருக்கு மகனாகப் பிறந்தேன். எம் இனத்திற்குஎம் மொழிக்குஓர் இடர் வந்தால்... எதிர்த்து நில்என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது...திராவிட இயக்கம்.தந்தை பெரியார்தலைவர் கலைஞர்.

அய்ந்து வயதுக்கு முன்னதாகவே, ஒரு சீர்திருத்தத் திருமண நாளன்று, தி.மு.க. கொடியேற்றும்போது நிறுத்துங்கள் சிவப்பு மேலே இருக்கிறது கறுப்பை மேலே வைத்துக் கட்டுங்கள் என்று சொன்னவன் நான். கலைஞர் கவிஞரே இல்லை என்று ஓர் எழுத்தாளர் எகத்தாளமாய் எழுதியபோது கொதித்து மறுப்புச் சொன்ன ஒரே பிள்ளை நான். இருவர் படத்தில் எம் தங்கையின் அம்மா அப்பாவை மணிரத்னம் கொச்சை செய்தபோது வலிவாங்கி எதிர்த்த ஒரே அண்ணன் நான். வயது சொல்லி எம் தலைவரை பார்ப்பணியம் ஓவ்வெடுக்கச் சொன்னபோது ஓங்கிக் குரல் கொடுத்தத் தொண்டன் நான்.

அப்படித்தான் என் கண்முன்பாகவே எம் உயிருக்குயிராக நேசிக்கும் தலைவர் திருமாவை ஒருவர் அவமானப்படுத்துகிறபோது பொறுத்துக்கொள்ள இயலாமல் போய் பதில் சொன்னேன். எம் அன்பான ஊடகங்களே! என் அன்பான உறவுகளே!இப்படிப்போய் எம் தலைவர் திருமாவின் வலிவாங்கி நான் பதில் சொன்னது நாகரிகமற்ற செயல் என்றால் மன்னியுங்கள். அந்த நாகரிகமற்ற செயலை நான் செய்து கொண்டேதான் இருப்பேன். இறுதிவரை பெரியாரின், அம்பேத்காரின் பிள்ளையாகவே இருப்பேன். இறுதிவரை கைநாட்டு மரபிலிருந்து எம்மைக் கையெழுத்து மரபிற்கு அழைத்து வந்த திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். என்றும் எந்தக் குறுகிற வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன். நான்.. உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை!

--நக்கீரனில் அறிவுமதி