Saturday, October 13, 2007

திராவிடர் ஆரியர் உண்மை

(திராவிடர் கழகம் வெளியிட்ட திராவிடர் ஆரியர் உண்மை என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.)


ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).


ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).


ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)


இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)


விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)


பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).


வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)


பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).


இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.
(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்14 ஆவது பக்கம்).


இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.
(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)


திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)

No comments: