Saturday, August 18, 2007

மஷ்ரூம் மலாய்க்கா

"வீட்ல இருக்கவரைக்கும் அப்பப்ப சமையலறை வரை போய் வருவதுண்டு" - அப்படிங்கற அளவுக்கு தான் என் சமையல் ஞானம். ஆனா சுடு தண்ணி சமைப்பேன்னு எனக்கு பொய் சொல்லத் தெரியாது. ஏதோ அதுல காரத்தையும், புளியையும் கலந்து ரசம் வைப்பேன். எப்போவாவது அம்மா ஊருக்கு போயிருக்கும் போது தான் இந்த ரசப்/விஷப் பரிச்சை எல்லாம்.

கல்லூரில படிக்கும் போதும், வேலைக்கு இந்தியா முழுக்க சுத்துன போதும், நமக்குன்னே சில நல்லவங்க (ஆனா அந்த தாகூர் மெஸ் Exception) மெஸ் திறந்து வைச்சிருப்பாங்க.. அப்படியே வாழ்க்கை ஓடிருச்சு. திரைகடலோடி திரவியம் தேட வந்த போது தான் வீட்டு சாப்பாட்டோட அருமை புரிய ஆரம்பிச்சுது.

என்னத்த தான் திம்பாய்ங்களோ? எப்ப பாத்தாலும், Pizza, Burger , அதுக்கு நடுவுல வெந்தும் வேகாமவும் பொர்க், பீப் கூட பீர், கோக், எனக்கு பாத்தவுடனே கண்ணக் கட்டும். சரி "Continental Europe Food"ன்னு ஒரு வகை, நம்ம பாஸ்தா, ஸ்பகட்டின்னு. அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல உவ்வேதான்.

ஒரு படத்துல கவுண்டமணி "முன்னோர், முன்னோர்ன்னு சொல்றியே, முன்னோர் ஒரு லைட்ட கண்டுபிடிச்சானா?, ப்ளைட்ட கண்டுபிடிச்சானா?, இல்ல ரேடியோவை கண்டுபிடிச்சானா?, இட்லிய கண்டுபிடிச்சான். இட்லிக்கு தொட்டுக்க நல்லாருக்கும்னு சட்னிய கண்டுபிடிச்சான்" அப்படின்னு சொல்வார். ஆனா அதே எவ்வளவு பெரிய சாதனைன்னு இங்க வந்த பிறகு தான் தெரியுது.

விவேக் ரன் படத்துல அம்மா காக்காய்க்கு சோறு வைக்கிறத கிண்டல் பண்ணிட்டு, பின்ன காக்கா பிரியாணி துண்ணும் போது தான், அம்மாவோட அருமை தெரியும். வெக்கப்படாம சொல்றேன், நமக்கும் இப்போ அதே நிலமை தான். :) இந்த காரணத்துக்காகவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது (சைடுல பிட்ட போட்டுட்டேன்!)

சரி மேட்டருக்கு வருவோம். அப்படியே முன்னேறி இப்போ ஏதோ நானும் சமைப்பேன்ங்கற அளவுக்கு வந்தாச்சு. சிச்சுவேஷனா சொன்னா நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு, நம்ம "மஷ்ரூம் மலாய்க்கா" செய்முறை விளக்கம் கொடுக்கப் போறேன். போகப் போக நளபாகம்னா என்னன்னு உங்களுக்கு தெரிய வரும்.

மஷ்ரூம்னா என்னன்னு நம்ம விக்கிபீடியாகிட்ட கேட்ட போது, அதொட தாவரவியல் பெயர் அமனிதா மஸ்கேரியான்னு சொல்லுச்சு. இதுல நார்ச் சத்து (Fiber), விட்டமின் B1, B2, B3, B12, C, B7, 12B, 47D (இது நம்ம விட்டமின்) மற்றும் தாதுச்சத்து இரும்பு, சீலேனியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் எல்லாம் வேற இருக்காம், (+2 உயிரியல், தமிழ் வழில படிச்சேங்ணா).


ஆனா ரோஜால முள்ளும் இருக்க மாதிரி, நம்ம மஷ்ரூம்லயும் விஷ காளான் இருக்கு. அதுனால தனியா தோட்டத்துல போய் காளான் பறிக்கறேன்னு கிளம்பிடாதீங்க. நல்ல டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ல, முடிவுக் காலம் நெருங்காத பட்டன் மஷ்ரூம் பாத்து வாங்குங்க.

வாங்குன மஷ்ரூம, பயன்படுத்தும் வரை, ப்ரிட்ஜ்ல வைச்சிருக்கனும். பின்ன அதை வெளிய எடுத்து கொஞ்ச நேரம் வைச்சிருந்திட்டு, சுடு தண்ணில கொஞ்ச நேரம் ஊரவச்சு, பிறகு கழுவனும். (ஒரு நிமிஷம் மைக்ரோவேவ் ஓவன்லயும் வைக்கலாம்)
கழுவுன மஷ்ரூம, சின்னதா நறுக்கிட்டு, கூடவெ நம்ம குரூப் டான்ஸர்களான வெங்காயம், ஒரு தக்காளி, பச்சை மிளகாய் (இந்த ஊர்ல சிகப்பு குடை மிளகாய்), வெள்ளைப் பூண்டு நாலு, கொஞ்சம் இஞ்சி வெட்டி வைக்கனும். (இந்த ஊர்ல இஞ்சி கிடைக்காத்துனால, இஞ்சி பவுடர் வைத்திருக்கிறேன், Customization is allowed unless it create bugs!)


தனியா, கொஞ்சம் தனியா (அட அதுதாங்க நம்ம கொத்தமல்லித் தூள்), கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, சோம்பு, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலாத் தூள், நம்ம மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு இதை எடுத்து வைக்கவும். எதுக்கு தேவையான அளவு?ன்னு எடக்கு மடக்கா கேட்க கூடாது.



இப்போ வாணலியை காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும், சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, வெங்காயம் இவற்றை நம்ம ஸ்ரேயா கலருக்கு வதக்கவும். (அதாங்க பொன்னிறம்). பின்ன கூடவே நம்ம க்ரூப் டான்ஸர்களையும் உள்ளே போட வேண்டும்.


இப்போ வெட்டி வைத்திருக்கிற காளான், தனியா, மஞ்சள் பொடி இன்ன பிற தூள்களையும் சேர்த்து, நன்றாக வறுக்க வேண்டும்.


கொஞ்ச நேரம் கழிச்சு வறுக்க போர் அடித்தவுடன், உள்ள கொஞ்சம் தண்ணியை ஊற்றி வெப்பத்தை குறைக்கவும். ஒரு 2 நிமிடம் கழித்துப் பார்த்தால் மஷ்ரூம் மலாய்க்கா ரெடி. மேக்கப் போட கொத்தமல்லித் தழை, கறுவேப்பிலை இருந்தால் நலம். இல்லாவிட்டால் அதை நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிடுவது அதை விட நலம்.

இதை சாப்பாடு கூட சைடு டிஸ்ஸா எடுத்து வைத்து விட்டு, ராமதாஸ் எதிரிகள் ஒயினையும், நம்மள மாதிரி ஆதரவாளர்கள் ஆப்பிள் ஜீஸையும் எடுத்து வைத்து விட்டால் "சாப்பிட வாங்க"ன்னு நம்ம வசந்த் & கோ, வசந்த குமார கூப்பிட்றது தான் பாக்கி.

நீங்களும் செஞ்சு பாத்துட்டு, நல்லாருந்தா நீங்க சாப்பிடுங்க, நல்லா இல்லைன்னா உங்க ரூம்மேட்கிட்ட கொடுத்திருங்க.

("மஷ்ரூம் மலாய்க்கா" - என்ன பெயர்க் காரணம்னு நீங்க கேக்கலாம். காளன் வதக்கல்ன்னு பேர் வைச்சா ஒருத்தனும் உள்ள வரமாட்டீங்க, அப்படியே You Tube போய் படம் பாக்க ஆரம்பிச்சிருவீங்க. இப்படி எதாவது புரியாத பாஷைல, கவர்ச்சியா பேரு வச்சாதான் நம்ம தமிழ் சமுதாயத்துக்கு பிடிக்கும்!)

2 comments:

விஜயன் said...

""இந்த காரணத்துக்காகவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது ""

directave unga annankitta sollalama.ethila enna erukku.

வினு said...

சொல்லத்தான் நினைக்கிறேன்