Saturday, August 18, 2007

மஷ்ரூம் மலாய்க்கா

"வீட்ல இருக்கவரைக்கும் அப்பப்ப சமையலறை வரை போய் வருவதுண்டு" - அப்படிங்கற அளவுக்கு தான் என் சமையல் ஞானம். ஆனா சுடு தண்ணி சமைப்பேன்னு எனக்கு பொய் சொல்லத் தெரியாது. ஏதோ அதுல காரத்தையும், புளியையும் கலந்து ரசம் வைப்பேன். எப்போவாவது அம்மா ஊருக்கு போயிருக்கும் போது தான் இந்த ரசப்/விஷப் பரிச்சை எல்லாம்.

கல்லூரில படிக்கும் போதும், வேலைக்கு இந்தியா முழுக்க சுத்துன போதும், நமக்குன்னே சில நல்லவங்க (ஆனா அந்த தாகூர் மெஸ் Exception) மெஸ் திறந்து வைச்சிருப்பாங்க.. அப்படியே வாழ்க்கை ஓடிருச்சு. திரைகடலோடி திரவியம் தேட வந்த போது தான் வீட்டு சாப்பாட்டோட அருமை புரிய ஆரம்பிச்சுது.

என்னத்த தான் திம்பாய்ங்களோ? எப்ப பாத்தாலும், Pizza, Burger , அதுக்கு நடுவுல வெந்தும் வேகாமவும் பொர்க், பீப் கூட பீர், கோக், எனக்கு பாத்தவுடனே கண்ணக் கட்டும். சரி "Continental Europe Food"ன்னு ஒரு வகை, நம்ம பாஸ்தா, ஸ்பகட்டின்னு. அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல உவ்வேதான்.

ஒரு படத்துல கவுண்டமணி "முன்னோர், முன்னோர்ன்னு சொல்றியே, முன்னோர் ஒரு லைட்ட கண்டுபிடிச்சானா?, ப்ளைட்ட கண்டுபிடிச்சானா?, இல்ல ரேடியோவை கண்டுபிடிச்சானா?, இட்லிய கண்டுபிடிச்சான். இட்லிக்கு தொட்டுக்க நல்லாருக்கும்னு சட்னிய கண்டுபிடிச்சான்" அப்படின்னு சொல்வார். ஆனா அதே எவ்வளவு பெரிய சாதனைன்னு இங்க வந்த பிறகு தான் தெரியுது.

விவேக் ரன் படத்துல அம்மா காக்காய்க்கு சோறு வைக்கிறத கிண்டல் பண்ணிட்டு, பின்ன காக்கா பிரியாணி துண்ணும் போது தான், அம்மாவோட அருமை தெரியும். வெக்கப்படாம சொல்றேன், நமக்கும் இப்போ அதே நிலமை தான். :) இந்த காரணத்துக்காகவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுது (சைடுல பிட்ட போட்டுட்டேன்!)

சரி மேட்டருக்கு வருவோம். அப்படியே முன்னேறி இப்போ ஏதோ நானும் சமைப்பேன்ங்கற அளவுக்கு வந்தாச்சு. சிச்சுவேஷனா சொன்னா நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு, நம்ம "மஷ்ரூம் மலாய்க்கா" செய்முறை விளக்கம் கொடுக்கப் போறேன். போகப் போக நளபாகம்னா என்னன்னு உங்களுக்கு தெரிய வரும்.

மஷ்ரூம்னா என்னன்னு நம்ம விக்கிபீடியாகிட்ட கேட்ட போது, அதொட தாவரவியல் பெயர் அமனிதா மஸ்கேரியான்னு சொல்லுச்சு. இதுல நார்ச் சத்து (Fiber), விட்டமின் B1, B2, B3, B12, C, B7, 12B, 47D (இது நம்ம விட்டமின்) மற்றும் தாதுச்சத்து இரும்பு, சீலேனியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் எல்லாம் வேற இருக்காம், (+2 உயிரியல், தமிழ் வழில படிச்சேங்ணா).


ஆனா ரோஜால முள்ளும் இருக்க மாதிரி, நம்ம மஷ்ரூம்லயும் விஷ காளான் இருக்கு. அதுனால தனியா தோட்டத்துல போய் காளான் பறிக்கறேன்னு கிளம்பிடாதீங்க. நல்ல டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ல, முடிவுக் காலம் நெருங்காத பட்டன் மஷ்ரூம் பாத்து வாங்குங்க.

வாங்குன மஷ்ரூம, பயன்படுத்தும் வரை, ப்ரிட்ஜ்ல வைச்சிருக்கனும். பின்ன அதை வெளிய எடுத்து கொஞ்ச நேரம் வைச்சிருந்திட்டு, சுடு தண்ணில கொஞ்ச நேரம் ஊரவச்சு, பிறகு கழுவனும். (ஒரு நிமிஷம் மைக்ரோவேவ் ஓவன்லயும் வைக்கலாம்)
கழுவுன மஷ்ரூம, சின்னதா நறுக்கிட்டு, கூடவெ நம்ம குரூப் டான்ஸர்களான வெங்காயம், ஒரு தக்காளி, பச்சை மிளகாய் (இந்த ஊர்ல சிகப்பு குடை மிளகாய்), வெள்ளைப் பூண்டு நாலு, கொஞ்சம் இஞ்சி வெட்டி வைக்கனும். (இந்த ஊர்ல இஞ்சி கிடைக்காத்துனால, இஞ்சி பவுடர் வைத்திருக்கிறேன், Customization is allowed unless it create bugs!)


தனியா, கொஞ்சம் தனியா (அட அதுதாங்க நம்ம கொத்தமல்லித் தூள்), கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, சோம்பு, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலாத் தூள், நம்ம மிளகாய்ப்பொடி, தேவையான அளவு உப்பு இதை எடுத்து வைக்கவும். எதுக்கு தேவையான அளவு?ன்னு எடக்கு மடக்கா கேட்க கூடாது.



இப்போ வாணலியை காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும், சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, வெங்காயம் இவற்றை நம்ம ஸ்ரேயா கலருக்கு வதக்கவும். (அதாங்க பொன்னிறம்). பின்ன கூடவே நம்ம க்ரூப் டான்ஸர்களையும் உள்ளே போட வேண்டும்.


இப்போ வெட்டி வைத்திருக்கிற காளான், தனியா, மஞ்சள் பொடி இன்ன பிற தூள்களையும் சேர்த்து, நன்றாக வறுக்க வேண்டும்.


கொஞ்ச நேரம் கழிச்சு வறுக்க போர் அடித்தவுடன், உள்ள கொஞ்சம் தண்ணியை ஊற்றி வெப்பத்தை குறைக்கவும். ஒரு 2 நிமிடம் கழித்துப் பார்த்தால் மஷ்ரூம் மலாய்க்கா ரெடி. மேக்கப் போட கொத்தமல்லித் தழை, கறுவேப்பிலை இருந்தால் நலம். இல்லாவிட்டால் அதை நினைத்துக் கொண்டே சாப்பிட்டுவிடுவது அதை விட நலம்.

இதை சாப்பாடு கூட சைடு டிஸ்ஸா எடுத்து வைத்து விட்டு, ராமதாஸ் எதிரிகள் ஒயினையும், நம்மள மாதிரி ஆதரவாளர்கள் ஆப்பிள் ஜீஸையும் எடுத்து வைத்து விட்டால் "சாப்பிட வாங்க"ன்னு நம்ம வசந்த் & கோ, வசந்த குமார கூப்பிட்றது தான் பாக்கி.

நீங்களும் செஞ்சு பாத்துட்டு, நல்லாருந்தா நீங்க சாப்பிடுங்க, நல்லா இல்லைன்னா உங்க ரூம்மேட்கிட்ட கொடுத்திருங்க.

("மஷ்ரூம் மலாய்க்கா" - என்ன பெயர்க் காரணம்னு நீங்க கேக்கலாம். காளன் வதக்கல்ன்னு பேர் வைச்சா ஒருத்தனும் உள்ள வரமாட்டீங்க, அப்படியே You Tube போய் படம் பாக்க ஆரம்பிச்சிருவீங்க. இப்படி எதாவது புரியாத பாஷைல, கவர்ச்சியா பேரு வச்சாதான் நம்ம தமிழ் சமுதாயத்துக்கு பிடிக்கும்!)

Wednesday, August 15, 2007

வெள்ளைப் புறா ரெண்டு

சமீபத்தில் லக்ஸம்பர்க் போயிருந்த போது, அப்படியே சித்ரா, ஜானகி குரலை எல்லாம் குழைச்சு, குழலூதும் கண்ணனுக்கு குயில்(கள்) பாடும் பாட்டு கேக்குதா.....ன்னு ரெண்டு குரல்.

மனதை வருடும் கித்தார் இசை வேற கூட, அப்படியே தேடித் தேடி ஒரு தெருமுனையில் போய் சேர்ந்தால், நிஜமாவே ரெண்டு குயில்கள்.





அப்படியே இசை மழை, அருவி மாதிரி பொழிந்தது.... அந்த கிட்டார் நானா இருக்க கூடாதான்னு கூட தோணிச்சு... கொஞ்ச நேரம் நனைஞ்சு வந்தேன்.

இசைக்கு ஏது மொழி? :-)

என்ன தோணுது?









இந்த படங்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை மறுமொழியாய் இடவும்... (திரைப்பாடல் முதல் வரி, கவிதை, கருத்து எது வேண்டுமானாலும் இருக்கலாம்)


சிறந்த தலைப்புகளில் ஒன்று "குலுக்கல்" முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால், சாத்தான் குளம் சென்று, டாடா ஆலையைப் பற்றி கருத்துக் கேட்கும் வாய்ப்பு வழங்கப்படும். உடனே முந்துங்கள்!!

ஏக் கெளமே ஏக் கிசான் ரெக்தா தா - நிறைவு

தொடர்ச்சி

காட்சி 3:

Brugge - Venice of Belgium......அப்படியே நதிக்கரை ஒரமா உக்காந்து "கறுப்பான கையாலெ என்ன புடிச்சான்" WalkMan ல கேட்டுட்டு இருந்தேன். நம்ம நண்பன் பக்கத்துல வந்து உக்காந்தான். என்ன அழகா River எல்லாம் Channalise பண்ணி, Plan பண்ணி, Transport பண்றாங்கன்னான். நம்ம ஆளுங்களும் தான் இருக்காங்களே?.





இந்த ரிவெர் Flanders இருந்து தானே இங்க வருது. நடுவர் மன்றம் இல்லையா?ன்னு கேட்டேன். ஒன் புத்தி ஏன் இப்படியே சிந்திக்குதுன்னு சிரிச்சான். அடிபட்ட சமுதாயம் அப்படி தான் இருக்கும்னு சொன்னேன். இந்தியாவில இருக்கிற உன்ன மாதிரி இங்க இருக்கவுங்க, எதுக்கெடுத்தாலும் கேள்வி கேக்கறது இல்லை, எல்லோரும் தேசிய ஒற்றுமையோட இருகாங்கன்னு சொன்னான்.

நான் தேசிய ஒற்றுமை எப்படி வரும்னு கேட்டேன்? எல்லோரும் ஒரு மொழி பேசி, ஒரு கலாச்சாரத்துல வாழ்ந்தா வரும்னான். கர்னாடகால எது தேசிய மொழி? இந்தி. ஆந்திரால? இந்தி. மகாராஸ்ட்ரால? இந்தி. மூணு மாநிலங்களுமே, மும் மொழித்திட்டத்தை ஏத்துக்கிட்டவுங்க. ஏன் அலமாட்டி பிரச்சனைல அடிச்சிகிறாங்க? சரி விடு, Hainaut -French மாநில மொழி, Flenders - Dutch மாநில மொழி. So Called தேசிய மொழி இங்க இல்லை. அப்படியும் பிரச்சனை இல்லை ஏன்?

தமிழ் நாட்டுக்காரங்க இப்படித்தான். எங்க போனாலும் எவன் கூடயும் சேர மாட்டாங்க, குதர்க்கமா கேள்வி கேப்பாங்கன்னான். நான் ஆத்துல ஒரு கல்லை தூக்கி வீசிட்டு Walk Man ஆன் பண்ணி மறுபடியும், "கறுப்பான கையால என்ன புடிச்சான்".... அட எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதே....நம்ம L.R. ஈஸ்வரி பாடினது... கற்பூர நாயகியே கனக வல்லி............


காட்சி 4:


என்னடா ஆர்குட் Profileல கம்யூனிசம்ன்னு போட்டிருக்க? எங்க தொழிற்சாலை ஆரம்பிச்சாலும், கைல சிவப்பு கொடியோட வந்து உக்கார வேண்டியது, சிறப்பு பொருளாதர மண்டலத்துக்கு நிலம் எடுக்க விட்றது இல்லை. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போனஸ், குறைந்தபட்ச கூலி, அது இதுன்னு அன்பே சிவம் கமல் மாதிரி பேசி, நாட்டுல ஒரு தொழில் தொடங்க விட்றது இல்லை. இதுக்கு பேர்தான் கம்யூனிஸமா? பேசி முடிச்சான்.

நான் தினத்தந்தி படிச்சிட்டிருந்தேன். டேய் மச்சி, கோயமுத்தூர் International Airportக்கு நிலம் எடுக்கறாங்களாம். கோல்டுவின்ஸ் எல்லாம் போகுதாம், உன் வீடு அங்க தானெ இருக்கு? அமைதியாவே கேட்டேன்.

அதுனால என்ன? நாட்டுக்கு தேவைன்னா தந்துட்டுப் போறது, இப்படி எல்லாருமெ, தரமாட்டேன்னு சொன்னா அரசாங்கம் எங்க தான் Airport கட்டும்?ன்னான்.

விஜயகாந்த்துக்கும் இது பொருந்தும்ல? இது நான். நீ பேசாமப் படின்னு சொல்லிட்டு, அவனோட மடிக்கணிணில மூழ்கீட்டான்.

கொஞ்ச நேரம் கழிச்சு, அவன் Screenஅ கொஞ்சம் எட்டிப் பாத்தேன். Google.com கீ வேர்ட்..Coimbatore New Airport Plan... வாழ்க Google!


காட்சி 5:


Tamil - A Classical Language - CNN IBN Liveல டாக்குமெண்டரி பாத்துட்டு இருந்தான். என்னடா? தமிழ் செம்மொழியாம்? இப்படி அறிவிச்சதுனால யாருக்கு லாபம்? தமிழ் செம்மொழியான எல்லா தமிழனுக்கும் சோறு கிடைச்சிருமா? வேலை கிடைச்சிருமா? எவனும் ரேஷன் க்யூவில நிக்க வேண்டாமா?ன்னு அறிவுப்பூர்வமா கேட்டான்.

அயோத்தில ராமர் கோயில் கட்டுனா இந்தியன் அத்தனை பேருக்கும் சோறு கிடைச்சிருமா?, காவிரி தண்ணி வந்துருமா?, இல்லை இந்தியை தேசிய மொழியா தமிழ் நாடு ஏத்துக்கிட்டாதான் எல்லாருக்கும் வேலை கிடைச்சிருமா? அவன் வழியிலே கேட்டேன்.

ராமர் பாலம் காக்க விஸ்வ இந்து பரிசத் தலைவர் போராட்டம்!, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் விளையாட வேண்டாம், அரசுக்கு எச்சரிக்கை!....அடுத்த செய்தி.



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்னு நான் எதையும் Conclude பண்ண விரும்பலை. விரும்பவும் கூடாது.

வேற்றுமையில் ஒற்றுமைன்னு சொல்றாங்க. சுதந்திரம் வாங்கி 60 வருசம் ஆச்சு. முக்கியமான விசயங்கள் எதுலையும் ஒற்றுமை இல்ல. எல்லாரும் எதுக்காகவோ அடிச்சிட்டு இருக்காங்க.

அதுக்காக சுதந்திரம் வேண்டாம், நாடும் வேண்டாம், எல்லாரும் தனித்தனியா போயிருவோம்னு சொல்லலை. முன்னால கருப்பனை வெள்ளைக்காரன் ஆண்டான். இப்பொ மொழியால நம்ம மேலயெ இன்னொருத்தர் ஏகாதிபத்தியம் செய்ய வேண்டாம்னு சொல்றேன். ஒற்றுமையா இருப்போம். அவரவர் சுயமரியாதையோட.

எல்லா விஷயத்தையும், Electronic Cityல இருந்தோ, Tidel Parkல இருந்தோ, Hitech Cityல இருந்தோ மட்டும் பாக்காதீங்க. இந்த நாட்டுல தான் 50 கோடி செலவுல கல்யாணம் பண்ற ஜோடியும் இருக்கு. ஆந்திராவுல, கத்தரிக்காய் விலை போகாம, தற்கொலை பண்ணிக்கிற சாதி சனமும் இருக்கு.

மத்தபடி, சுதந்திரம் மேல எந்த கோபமும் இல்லை. தமிழ் நாட்டில் ஏதோ குக்கிராமத்தில் பிறந்து, "பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர்"ன்னு இன்னமும் அலைஞ்சிட்டிருந்தாலும், நினைத்ததெல்லாம் சொல்ல, பேச, எழுத, தாய் நாடு சுதந்திரம் கொடுத்திருக்கு. அதற்கு நன்றிகள். வாழ்க சுதந்திரம். வாழ்க ஒற்றுமை!

Monday, August 13, 2007

ஏக் கெளமே ஏக் கிசான் ரெக்தா தா (1)


நம்ம நண்பன் ஒருத்தன், இந்தியா மேல பற்று அதிகம். தெலுங்கு தாய் மொழி, டமில் வளர்ப்பு மொழியானாலும், நான் இந்தியனா இருப்பதினால இந்தி தான் என் தாய் மொழின்னு சொல்லுவான். பள்ளி இறுதி வரை தமிழ் படிக்கவே இல்லை. எனக்கு டமில் படிக்க தெரியாதுன்னு சொல்றதில ஒரு நிமிஷம், வெள்ளைக்காரன மாறுன மாதிரி ஒரு பெருமை. தேசியக் கொடிக்கு முன்னால நின்னு விறைப்பா சல்யூட் அடிப்பது, பாலிவுட் படங்கள் மட்டுமே பார்ப்பது, ஹோட்டல் போனால் அரிசி சாப்பாடை எதொ பாக்க கூடாதத பார்க்கற மாதிரி பார்த்துட்டு, ரெண்டு நான், பன்னீர் மசாலா வாங்கி சாப்பிடுவதுன்னு ஒரு ரியல் 'இந்தி'யனா இருந்தான்.


நான் இது மாதிரி நிறைய பேர பாத்து இருக்கேன். இந்தி படிக்காம எப்பவுமெ "தமிழ், தமிழ்"ன்னு சொல்ற நீங்களெல்லாம் தேசிய விரோதிகள், நாங்க தான் தேசிய வாதிகள்ன்னு சொல்லுவாங்க. இவங்களுடைய இந்திய நம்பிக்கைங்கறது, "இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி, பாலிவுட் தான் நம்து திரையுலகம், டமில் என்பது ப்ராந்திய மொழி, கறுப்பு என்பது தாழ்ந்த நிறம், எனக்கு H1B விசா கிடைச்சா அமெரிக்கா வாழ்க, Reservation is non-sense , திருப்பதி ஏழுமலையான பாக்கறதுக்கு 1 வாரம் Qல நிக்கறதுல தப்பு இல்ல" இந்த மாதிரி விஷயங்கள்ள தான்.


எது தேசியம்? எது தேசம், எது ஒற்றுமை? என்பதில் அடிப்படையான புரிதல் கூட இவங்களுக்கு இல்லை என்பது என்னோட வலுவான நம்பிக்கை. இதற்கும் மேலாக, இவர்கள் எல்லாம், இந்தியா என்ற Brand Value வை நேசிப்பவர்களே தவிர உண்மையான கடைக்கோடி இந்தியனை பற்றியும், இன்னும் மலம் அள்ளிக் கொண்டிருக்கும் சமுதாயத்தையும் பற்றி அக்கறை இல்லாதவர்கள். பிரிட்டிஷ்காரன் இடத்தை நிரப்பிய 'இந்தி'யர்கள். நான் பொதுவாக இவங்களுக்கு பதில் சொல்றதில்லை.

காட்சி 1:


ரெண்டு வாரம் முன்னே "Incredible India"ன்னு CNN ல ஒரு நிகழ்ச்சி. ரெண்டு பேரும் உக்காந்து Lays தின்னுட்டு பாத்துட்டு இருந்தோம். யங் இந்தியான்னு ஹைதராபாத், பெங்களூரு, சென்னையிலிருக்கும் கண்ணாடி கட்டிடங்களையும், தலையில Head Phone மாட்டி "Good Morning Sir, May I help you" ன்னு கேட்டுட்டு இருந்த பொண்ணுங்களையும் காட்டிட்டு இருந்தவன் அப்படியெ கேமராவை திருப்பிட்டு பீகார் போயிட்டான். வெள்ளம், ஈயரிக்கும் மார்க்கெட்டில் மீன் வாங்கும் பெண், வயலில் ஆடை அணியாமல் மாடு ஏறி உழுபவர், ரோட்டில் குத்த வைத்து தம் அடிக்கும் பெருசு, நடு ரோட்டில் ஒன்னுக்கு போகும் பையன்......ஆ..ஆ.ஆ.... அவனுக்கு வந்தது பார் கோபம், சிப்ஸ் எல்லாத்தையும் தூக்கி விசிறிட்டான். இந்தியாவுல எத்தனை நல்ல இடம் எல்லாம் இருக்கு, இவனுக வேணும்னே இந்த மாதிரி இடத்தை காட்டி மானத்தை வாங்கறாங்கன்னான்.



நான் ரொம்ப அமைதியாக அவனுடைய "தேச பக்தர்" ரஜினி சொல்ற மாதிரி Cool, Relax!ன்னேன். இது தானே உண்மை, இதை வெளியில சொல்றதில என்ன வெட்கம்னேன். இதை பாத்துட்டு தான் வெளிநாட்ல எல்லாம் எவனுமே இந்தியாவை மதிக்க மாட்டேங்கிறான் அப்படின்னான். There is more Room at the top.... விளம்பரம்.. Qatar Airways..!


காட்சி 2:



ஒரு வார இறுதி. வீட்ல மொக்கை போட்டுதுன்னு ஊர் சுத்தக் கிளம்பினோம். போனது ஒரு சிட்டி. Antwerb - வைர நகரம், வைரம் பட்டை தீட்டுவதற்கு பெயர் பெற்ற ஊர். துறைமுகம் வேற. கேட்கவா வேணும்?, பிரமிப்பா இருந்தது. Belgiumல ரெண்டு ஏரியா. ஒன்னு நான் இருக்கற Wallonia -French பேசும் இடம். அடுத்தது Flanders - Dutch ஏரியா. எங்க திரும்பினாலும் Dutch பெயர்ப் பலகைகள். மருந்துக்கு ஒருத்தன் கூட ப்ரெஞ்ச் பேசலை. நமக்கு தமிழ தவிர எல்லா மொழியுமெ "ஏக் கெளமெ ஏக் கிசான் ரெகதா தா" தான். அதுனால எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியல.


Tourism Office போய் எனக்கு தெரிஞ்ச ப்ரெஞ்ச்-ல "பாஞ்சூர், மிஸ்தியுர்.." ன்னு ஆரம்பிக்கறதுக்குள்லே, "ப்ரெஞ்சா.....! எனக்கு வாமிட் வாமிட்டா வருது" ன்னு உள்ள ஓடிட்டான். 10 நிமிசம் கழிச்சு ஒரு பட்லர் இங்லீக்ஷ் பையன் வந்து வழி சொன்னான். நம்ம நண்பன் வெறிச்சுப் பாத்துட்டே கூட வந்தான். சரி எதாவது சாப்பிடுவோமேன்னு வழியில இருக்கற ஒரு Cafeக்குள்ள நுழைஞ்சோம். நம்ம பீட்டர், ஒரு பீர், ப்ரெஞ்ச் நூடுல்ஸ் ஆர்டர் பண்ணினான். நான் ஒரு டுரம், ஜினி ஆர்டர் பண்ணினேன். அவன் மேலயும் கீழயும் பாத்துட்டு நம்ம உஸ் பாலாஜி மாதிரி "அய்யூப்பா"ன்ட்டு போயிட்டான். அரை குறை ட்ரெஸ் போட்ட ஒரு பொண்ணு ஓடி வந்து "இங்க ப்ரெஞ்ச் ரெசிபி கிடைக்காது, because its Flanders" ன்னு சொல்லிச்சு.






வேற வழி....."வாலா மெர்சி" ன்னு சொல்லிட்டு வெளிய வந்தோம். "திக்கற்ற NRIக்கு Pizza Hut ஏ துணை!". திரும்பி வரும் போது என் வீட்டுக்கும் Antwerbக்கும் தொலைவு பாத்தேன். 110 KM. :)) More smiles per hour....!

காட்சி 3:


Brugge - Venice of Belgium......அப்படியே நதிக்கரை ஒரமா உக்காந்து "கறுப்பான கையாலெ என்ன புடிச்சான்" WalkMan ல கேட்டுட்டு இருந்தேன்.



(தொடரும்)