"குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவத்தான் வேண்டும்" - கடந்த 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் நிலையும் அதே தான்.
கருணாநிதி சொன்ன மாதிரி "கொஞ்சம் அதிகமான நேரத்துல" (கோபம் தான்) யாரோ போட்டுக் கொடுத்ததன் விளைவாக, அனைத்து சாலைப் பணியாளர்களையும், எதோ போயஸ் கார்டன் எடுபிடிகள் என்று நினைத்து ஒரே உத்தரவின் மூலம் தெருவில் நிறுத்தினார் ஜெயலலிதா.
கல்யாணம் ஆனவர், ஆகாதவர், குழந்தை குட்டிக்காரர், கூட்டுக் குடும்பக்காரர் என பலதரப்பட்ட சாதாரண மக்களின் அடுத்த வேளை சோற்றை கேள்விக் குறியாக்கியது இந்த கையெழுத்து.
பிச்சை எடுக்கும் போராட்டம், அரைநிர்வாணப் போராட்டம், ஒப்பாரி வைக்கும் போராட்டம், என விதவிதமான போராட்டம் நடத்தியும், எல்லாம் "தாயுள்ளம் கொண்ட அம்மா" மனதை கொஞ்சம் கூட கரைக்கவில்லை. மாறாக உச்ச நீதிமன்றம் வரை சென்று ஏழைத் தொழிலாளர்களுக்கு எதிராக வாதிடும் வெறியை மட்டும் கொடுத்தது.
எல்லாம் கருணாநிதி காலி செய்துவிட்டுப் போன கஜானாவை நிரப்புவதற்காக என்று ஜெயா டிவி சொன்னாலும், உண்மையான காரணம் "உண்ணிகிருஷ்ண பணிக்கருக்கே பிரசன்னம்".
ஆண்டுகள் உருண்டோடி அடுத்த குரங்கை தேர்ந்தெடுக்கும் அதிஷ்டமான வாய்ப்பு தமிழ் நாட்டு மக்களுக்கு வரும் முன்பு 75 உயிர்கள் பறி போய்விட்டன. கஜானாவை நிரப்பிய அம்மாவும் "நிதானத்திற்கு" வந்து மறுபடியும் வேலை கொடுத்துவிட்டார்.
இப்போது அந்த 75 குடும்பங்களின் நிலை.................?
நீங்களும், நானும் யோசிக்கவில்லை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் யோசித்திருக்கிறது. அதன் விளைவே இந்த ஆவணப்படம்.
சுமார் 45 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் ஆரம்பத்தில் ஏதோ சன் செய்திகள் சிறப்புப் பார்வை மாதிரி இருந்தாலும், அடுத்த 10 நிமிடங்களில் இருக்கையில் நிலை கொள்ளச் செய்கிறது.
கடைசி காட்சியில் "அப்பா எங்கே?" என்று அந்த அப்பாவிச் சிறுமியிடம் கேட்கும் போது அந்தக் கண்கள் ஆயிரம் கேள்வி கேட்டு விட்டு, பதில் தெரியாத மழலையாய் கீழே குனிகிறது.
ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி. "இதைக் கொண்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள்?"
2 comments:
"ஜெயலலிதாவிடம் ஒரே கேள்வி. "இதைக் கொண்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள்?"
சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு சாட்டையடி கேள்வி
(ஆனா "அய்யாவோ" "அம்மாவோ" இதுக்கெல்லம் பதில் சொல்ல மாட்டாங்கன்றது வேற விஷயம்)
நமது மக்களின் ஞாபக மறதியால் விளையும் கொடுமைகளின் உச்சம் என்ன தெரியுமா? அதே குரங்கின் கையில் மறுபடியும் பூமாலையை கொண்டுபோய் கொடுப்பதுதான்
ஆட்சியாளர்களை விட,தன்னலத்திற்காக இதற்கெல்லாம் துணைபோகும் "ஜால்ரா" கள் (உ-ம் ஒ.பன்னீர்செல்வம்,துரைமுருகன்) போன்றோர்தாம் தண்டிக்கப்பட வேன்டியவர்கள்!
துரைமுருகன் IS IN OPPOSITE PARTY I GUESS?
Post a Comment