விடுதலைப் புலிகளைக் கொண்டு விரும்பத்தகாத அரசியல் சர்ச்சைகள் தமிழக அரசியலில் அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்செல்வன் அவரது சமாதானச் செயலகத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை அரசால் குண்டுவீசிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய ‘இரங்கற்பா...’ அவரை, ‘ஆட்சியை விட்டு இறங்கப்பா...’ என்ற அளவுக்கு ஆவேச அலைகளை உருவாக்கி உள்ளது.
‘கருணாநிதியைக் கைது செய்யவேண்டும்.’‘இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்’ என்கிறார் ஜெயலலிதா. ‘‘விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம். இதற்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் அது தேசவிரோதமாகும்’’ என்றும் கூறுகிறார் ஜெயலலிதா. எனில், விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோ எப்படி அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்? எனக் கேட்டால், ‘‘கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படுவது’’ என்கிறார். அப்படியானால் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்காக தேசத் துரோகத்தை ஜெயலலிதா மன்னித்து மறந்துவிடுவார் போலும்!
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு மனநிலை கொண்டிருப்பதும், எதிர்ப்பு மனநிலை கொண்டிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அந்த மனநிலை சார்ந்து இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படாதவரை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோர முடியாது.
ஜனநாயக நாட்டில் எவருக்குமுள்ள கருத்துச் சுதந்திரத்தை, எந்தப் பூச்சாண்டியைக் காட்டியும் பறிக்க முயல்வது தீவிரவாதத்தையும் மிஞ்சிய தீவிரவாதமாகவே அர்த்தப்படும்.
ராஜீவ்காந்தியை தமிழ் மண்ணில் கொன்று சாய்த்த விடுதலைப்புலிகளை காங்கிரஸ் கட்சி மன்னிக்காது, மறக்காது என்கிறார்கள் தமிழக காங்கிரஸார்.
ராஜீவ்காந்தியை துப்பாக்கி மட்டையால் தாக்க முயன்ற விஜயமுனி என்ற சிங்களச் சிப்பாய் இன்று இலங்கையில் அரசியல் அந்தஸ்து பெற்ற முக்கியஸ்தராக வலம் வருகிறார்.
இப்படிப்பட்ட இலங்கைக்கு இரண்டு போர்க் கப்பல்களை (ஐ.என்.எஸ்.சரன்யூ, சி.ஜி.எஸ்.வார்த்தா) இந்தியா இலவசமாக தந்தபோது அதை இங்குள்ள காங்கிரஸார் தடுத்திருக்க வேண்டாமா?
தமிழகத்தின் மக்கள்தொகை யில் மூன்றில் ஒன்றேயுள்ள சின்னஞ்சிறிய இலங்கையின் ராணுவத்தினர் குருவி சுடுவது போல் தமிழக மீனவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததற்கு அந்த அரசின் மீது மத்தியஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இப்போது, ‘‘கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா எங்களின் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்துவிட்டது’’ என்று குமுறும் காங்கிரஸாருக்கு இதற்கெல்லாம் சாதாரண கண்ணீர் கூட வராதா?
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மாகாந்தியை ஆர்.எஸ்.எஸ்.சின் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது. அந்தத் தடை சுமார் 16 மாதங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டது. எந்த ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகக் கடுமையாக விமர்சித்தாரோ அதே ஆர்.எஸ்.எஸ்.ஸை மிகவும் மதித்து ‘இதன் அருமை பெருமைகளை குறைத்து மதிப்பிட முடியாது’ என்றார் ஜவஹர்லால் நேரு. 1963_ல் நடந்த குடியரசு தினவிழாவில் ஆர்.எஸ்.எஸ்.ஸை அரசுப் படைகளோடு அணிவகுக்கச் செய்து அழகு பார்த்தார் நேரு.
ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்ததுதான் விடுதலைப்புலிகள் செய்த பெருந்தவறு. ஆனால் அதற்கு முன்பும் சரி, பின்பும்சரி விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரியாகச் செயல்பட்டதில்லை.
இதன் மற்றொரு எதிர்வினையாக சிங்கள அரசு இந்திய அரசோடு நெருங்கவும், அதன் அத்துமீறிய மனித உரிமை மீறல்களை இந்திய அரசு அலட்சியப்படுத்தவுமான அவலம் நேர்ந்துவிட்டது.
ஆனால் இலங்கை அரசோ இந்தியாவிற்கு என்றுமே நம்பிக்கை நண்பனாக இருந்ததில்லை.
இலங்கை தீபகற்ப பகுதியை அமெரிக்காவின் ராணுவத்திற்கு தாரைவார்த்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தந்ததால்தான் இந்திராகாந்தி விடுதலைப்புலிகளுக்கு இந்திய மண்ணில் பயிற்சி தந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை குறைந்தபட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டு, இந்திராகாந்தியால் பரிந்துரைக்கப்பட்ட ‘அனெக்சர் சி’ திட்டத்தை அம்போவென்று கைவிட்டது இலங்கை அரசு.
ராஜீவ்காந்தி காலத்தில்அதைக் காட்டிலும் குறைவான உரிமை களை தமிழர்களுக்குத் தரும் அட்டர்னி ஜெனரல் பராசரனால் பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்தவில்லை.
இப்போது இந்தியாவின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இந்தியாவுடன் பங்காளிச்சண்டை கொண்ட சீனாவுடனும், பகை கொண்ட பாகிஸ்தானோடும் இலங்கை ராணுவ உடன்படிக்கை செய்து கூடிக்குலவுகிறது.
இந்நிலையில், ‘சிங்கள அரசுக்கு ஒரு ‘செக்’ வைக்கும் விதத்தில் விடுதலைப்புலிகளை பயன்படுத்திக்கொள்ளலாமா’ என்று கூட இந்தியா ராஜதந்திர ரீதியாக யோசிக்கலாம்.
விடுதலைப்புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பால் இலங்கைப் பிரச்னையின் யதார்த்தங்களை பார்க்கவேண்டும். இந்தியாவைப் போல் இலங்கை மதச்சார்பற்ற நாடல்ல.
அது சிங்களபௌத்த நாடாக அதன் அரசியல் சட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடாகும். அங்கே அதிபராகவோ, பிரதமராகவோ, முப்படைத் தளபதிகளில் ஒருவராகவோ தமிழர்கள் வருவதை நினைத்தும் பார்க்க முடியாது. இந்நிலையில் சர்வதேச ரீதியில் அமெரிக்காவின் செனட் உறுப்பினரான ஹிலாரி கிளிண்டன் பிரிட்டனின் ‘தி கார்டியன்’ இதழுக்கு ‘‘இலங்கையின் விடுதலைப்புலி களையோ, ஸ்பெயினின் பாஸ்க் போராளி களையோ பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது’’ என பேட்டியளித்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கருணாநிதியின் ‘கண்ணீர் இறங்கற்பா’ என்பது இழந்து கொண்டிருக்கும் தமிழினத் தலைவர் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள எழுதப் பட்டிருக்கலாம். அதைப்பற்றிய கவலையை கருணாநிதிக்கே விட்டுவிடலாம். ஏனெனில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதில் இன்றுவரை கருணாநிதி இரண்டுங்கெட்டா னாகத்தான் இருக்கிறார். பெரும்பாலும் அவரது அரசியல் ஆதாயத்திற்குத் தக்கபடியே இந்த ஆதரவையும், எதிர்ப்பையும் முடிவு செய்கிறாரேயன்றி, இந்திய நலன்களையும், இலங்கைத்தமிழர் நலன்களையும் இணைத்து முடிவு எடுப்பவரல்ல கருணாநிதி.
ஆனால் அந்தப் பொறுப்பு காங்கிரஸாருக்கு இருக்கவேண்டும். இலங்கைப் பிரச்னையை வெறுமனே விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது ஜனநாயகத்திற்கு ஆபத் தானது, வறட்டுத்தனமானது, ஆரோக்கியமற்றது..
நன்றி: குமுதம்