Sunday, February 17, 2008

'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

வேலூர் தங்கக் கோவிலில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் 320 ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார். நாராயணி பீடத்தின் தலைவர் சக்தி அம்மாவின் சார்பில் மொத்தம் 320 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 207 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிதி உதவிகளை கருணாநிதி வழங்கினார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அன்பு என்பது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது. நான் அன்பு காட்டினால், அதைப்போல அன்பு காட்டப்படுகின்றவர் என்னிடம் அன்பு காட்டினால் அங்கே பரிமாறிக் கொள்ளப்படுகின்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. கருணை என்பது ஒருவர் கொடுப்பது, அவர் திரும்பப் பெறுவதில்லை. திரும்ப தராத நிலையில் ஒருவர் பெற்றுக் கொள்வது, அது கருணை.

இங்கே எனக்கும், இந்த பீடத்தினுடைய அதிபருக்கும் இடையிலே இருப்பது அன்பு. நான் அவரிடத்திலே அன்பு காட்டுகிறேன். அவரும் என்னிடத்திலே அன்பு காட்டுகிறார். நான் அன்பு காட்டுவதற்கு காரணம் அவர் ஏழை-எளிய, நலிந்த மக்கள் இடத்திலே கருணை காட்டுகிறார். இப்போது அன்புக்கும், கருணைக்குமுள்ள வேறுபாடு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

அதனால்தான் மூன்றாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தபோது அருள்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை அழைத்து ஏழை குழந்தைகளுக்காக, ஆலயங்கள் பராமரிப்பில் கருணை இல்லங்களைத் தொடங்கினேன். முதல் முதல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அந்த இல்லம் தொடங்கப்பட்டது. அப்போது வாரியார் தான் அந்த இல்லத்திற்கு கருணை இல்லம் என்று பெயர் சூட்டினார்.

பல ஆலயங்களிலே அந்த கருணை இல்லங்கள் உருவாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.
அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களின் காரணமாக அந்த கருணை இல்லங்கள் பல இடங்களில் சரியாக செயல்படவில்லை. அதனை அறநிலையத்துறை அமைச்சரிடத்திலே சொல்லியிருக்கிறேன். அவர் கவனிப்பதாகச் சொன்னார். கவனித்திருப்பார் என்று நம்புகிறேன்.

இன்றைய தினம் இந்த இடத்திலே 320 நலிந்த குடும்பங்களைச் சார்ந்த சிறார்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது என்பதும், அதற்காக அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது என்பதும் சாதாரணமான விஷயமல்ல.

நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.

நாங்கள் இப்போது 5வது முறையாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கும் நிலையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். நலிந்த குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு இதய நோய் வந்தால், அவர்களைக் காப்பாற்ற என்ன அளவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவக் குழு மூலம் அறிந்து, சாதாரண சிகிச்சை போதுமா, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா என்பதை அறிந்து அதற்குத் தேவையான நிதியாக ரூ.10,000 முதல் ரூ.70,000 வரை தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. அந்த தேவையை நிறைவு செய்கிற-நாமெல்லாம் எண்ணி மகிழ்கின்ற நல்ல காரியத்தை இந்தப் பீடத்தின் அதிபர், இளமையிலேயே துறவு கோலம் பூண்டு, இளமையிலேயே ஆன்மிகப் பற்றாளராக மாறி இன்றைக்கு அந்த தொண்டினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

இங்கு பேசிய சிலர் ஆன்மிகம்-அறிவு என்ற இரண்டையும் இணைத்துப் பேசினார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகம், அறிவு இரண்டும் இரட்டைக் குழந்தைகள். அதிலே எந்த விதமான வேறுபாடும் இல்லை.

இரட்டைக் குழந்தைகளே தவிர, ஒட்டிப் பிறந்த குழந்தைகள் இல்லை. தனித்தனியான குழந்தைகள்தான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள். ஒன்று ஆன்மிகம்-ஒன்று அறிவியக்கம். ஆன்மிகத் துறை, அறிவியக்கத் துறை என்ற இரண்டு துறைகளும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்ளக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், ஒன்றுமே செயல்பட முடியாமல் போய் விடும். ஏதாவது செயல்பட வேண்டுமேயானால் இரண்டும் தனித்தனியாக இருந்தால் தான் செயல்பட முடியும். அதனால் தான் சென்னையிலே அண்ணா அறிவாலயம் இருக்கிறது, வேலூரில் இந்த தங்கக் கோயில் இருக்கிறது.

இரண்டும் தனித் தனியாக இருந்து மக்களுக்கு, ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

நாராயணி பீடத்திற்கு கருணாநிதி வருகிறானே என்று சில பேர் மகிழ்ச்சி அடைவார்கள், சில பேர் கேள்விக்குறி ஆவார்கள், சில பேர் அதிர்ச்சி அடைவார்கள் என்றெல்லாம் நம்முடைய அடிகளார் சொன்னார், பரவாயில்லை. அவர் உலகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறாரோ இல்லையோ, தமிழ்நாட்டை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறார்.

அதிலும் தமிழ்நாட்டு அரசியலை நேர்த்தியாகப் புரிந்து வைத்திருக்கிறார், அதிலும் இந்த 32 வயதிலே என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாராயணி என்பதாலேயே நான்-நாராயணியின் உருவத்திலே இருக்கின்ற கடவுளை ஏற்றுக்கொண்டேன் என்பதல்ல. பல மடாதிபதிகள், பண்டார சன்னதிகள், துறவிகள் இவர்கள் எல்லாம் கலந்து கொண்ட ஒரு மாநாடு சென்னையில் கற்பகாம்பாள் மண்டபத்தில் 1970ம் ஆண்டு வாக்கில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் முதல், சாந்தலிங்க அடிகளார் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதில் நான் பேசும்போது குறிப்பிட்டேன். கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறானா என்பதல்ல பிரச்சினை. கடவுள் கருணாநிதியை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு, அவன் கடமை ஆற்றுகிறானா என்பது தான் பிரச்சினை.

பிரச்சினை கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது தான். கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன, 300 கோடிக்கு மேல் மக்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே ஒரு கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், கடவுள் என்ன அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய் விடுமா?. அந்த ஓட்டெடுப்பு எல்லாம் தேவையில்லை.

நாம் நமக்கு நல்ல உள்ளத்தோடு, நம்முடைய காரியங்களைச் செய்தால் அது தான் கடவுள். உண்மை ஒன்றே தெய்வம் என்று பாரதி பாடினார். ராமலிங்க அடிகளும் அதைத்தான் சொன்னார். 'அருட் பெருஞ்சோதி, தனிப் பெருங்கருணை' என்று மொழிந்த வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார், அறிவு ஒளியைத் தான், உண்மை ஒளியைத் தான் தெய்வம் என்றார்.

'நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே, சுத்தி வந்து மொண மொண வென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்' என்றார் சிவ வாக்கியர். அவரை சித்தர் என்கிறோம், ஆனால் அதை நாங்கள் எடுத்துச் சொன்னால், எங்களை பித்தர் என்கிறார்கள்.

இதைப் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் எடுத்துக் காட்டுகிறேன். நல்லவைகளைச் செய்யும்போது, அவர்கள் நாத்திகர்களா, ஆத்திகர்களா, அவர்கள் செய்கின்ற காரியம் என்ன என்பதில் தான் நாம் முனைப்பாக கருத்து செலுத்த வேண்டும்.

அந்த வகையிலே தான் நாராயணியை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்றால், இப்படி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒவ்வொரு நாளும் காலையில் யோகா வகுப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். தேசிகாச்சாரி என்று ஒரு பிரபலமானவர் எனக்கு யோகா சொல்லித் தருகிறார். அவருடைய தந்தையும் யோகா ஆசிரியர். அவர் யோகா ஆசிரியராக இருந்த காரணத்தால் 102 வயது வரையிலே வாழ்ந்தவர். அந்த ஆசையிலே நான் யோகா கற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்காக உழைக்க உடலில் வலு இருக்க வேண்டுமே என்பதற்காக யோகா கற்றுக் கொள்கிறேன்.

கற்றுக்கொடுக்கின்ற தேசிகாச்சாரியார் முதல் நாள் எனக்கு பாடம் சொல்லும் போது, இரண்டு கைகளையும் உயர்த்தி, தாழ்த்தி, இப்படி இப்படி அசைத்து, பயிற்சி பெற வேண்டுமென்று சொல்லும்போது, அவர் சொல்லிக் கொடுத்த வாக்கியம் 'நாராயண நமஹ, நாராயண நமஹ' என்பதாகும். ஆனால், அதைச் சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது.

'ஏங்க, நாராயண நமஹ என்று தான் சொல்ல வேண்டுமா? நாராயண நமஹ என்றால் என்ன? என்றேன்.

ஒன்றும் இல்லீங்க, சூரிய நமஸ்காரம் என்றார்.

நானும் சூரிய நமஸ்காரம் பண்ணுகிறவன் தானே, எனக்கும் சூரியனை மிகவும் பிடிக்குமே, நாராயண நமஹவுக்கு பதிலாக ஞாயிறு போற்றுதும் என்று சொல்கிறேனே என்றேன்.

சரி, சொல்லுங்கோ என்றார். அவ்வளவு தான், தினந்தோறும் காலையிலே யோகா வகுப்பு நடக்கும்போது, அந்த பயிற்சிக்கு நான் சொல்கிற வாசகம், 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்பது தான்.

இப்போது, தேசிகாச்சாரியாரும் இதைத் தான் சொல்லி வருகிறார் என்பது வேறு விஷயம்.

எனக்கு பிடித்ததை நான் சொல்கிறேன், அவருக்கு பிடித்ததை அவர் சொல்கிறார்-இரண்டும் ஒரே விளைவு தான். இரண்டும் ஒன்று தான். ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் அப்போது இரண்டும் ஒன்றில்லை. அதனால் தான் சொல்கிறேன்.

அன்பு, பரிமாறிக் கொள்ளக் கூடியது, கருணை ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்ளக் கூடியது. அன்புக்கும், கருணைக்கும் வேறுபாடு தெரிந்து நடைபெறுகிற இந்த அருமையான ஆலயத்தில் இந்த இனிய வரவேற்பைப் பெற்றமைக்காகவும், இந்த வரவேற்பைத் தருவதற்கு நம்முடைய அடிகளார் அவர்கள் முன் வந்ததற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை தம்பி துரைமுருகனைப் போன்றவர்கள் செய்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

No comments: