Wednesday, February 27, 2008

என் இனிய சுஜாதா



எழுத்தாளர் சுஜாதாவின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த நிமிடம் வரை அவரது நிறைய எழுத்துக்களோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருடைய தமிழ் நடை எனை ஆட் கொண்டது.

ஒரு விமர்சகனாய் அவரது எழுத்துக்கள் திருவரங்கத்திலும், மயிலாப்பூரிலும் வந்து முடிவதாய் எனக்குப் பட்டாலும், அதுவும் ஒரு பால்ய கால வாழ்க்கையின் பாதிப்பாய் மட்டுமே தோன்றுகிறது.

இவருக்குப் பின்னால் இந்த பரந்து விரிந்த அறிவியல் தளத்தில் எழுத யார் உள்ளார்கள்?

நான் முதலில் படித்த நாவலே அவர் எழுதிய "வாய்மையே சில சமயம் வெல்லும்" தான்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆவலாய்ப் பார்த்த "என் இனிய இயந்திரா", மற்றும் அப்போது அடிக்கடி நான் விளையாட்டாய் அடிக்கடி சொல்லும் "வாழ்க ஜீவா"வும் நினைவுக்கு வந்து செல்கிறது.

பிறகு அவர் கற்றதும் பெற்றதும், முதல்வன் தொடங்கி சிவாஜி வரை எழுதிய சில வசனங்களில் (அங்கவை சங்கவை வரை)எனக்கு ஒப்புமை இல்லாவிட்டாலும், அவர் மீது இருந்த மரியாதை குறையவில்லை.

சுஜாதாவை இழந்து வாடும் அவரது எழுத்து உலக ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Sunday, February 24, 2008

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியம்சாமிக்கு தொடர்பு?

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது என்றும், புலி ஆதரவு இயக் கங்களைத் தடைசெய்ய வேண்டும்என்றும் குரல் கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் காங்கிரஸ் தலை வர்கள் இந்தக் குரல்களுக்கு சொந்தக்காரர்கள். இன்னொரு பக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தி, 'ராஜீவ் கொலை வழக்கில் நடந்தது என்ன?' என்று வேறொரு கோணத்தில் பரபரப்பு கிளப்பும் திட்டத்தில் இறங்கியிருக்கிறார் திருச்சி வேலுச் சாமி. இவரும் ஒரு காங்கிரஸ்காரர் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்!


அவரை சென்னையில் சந்தித்தோம். ''கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்த லில், 'தலைவர் ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அதற்கான பழி தமிழன் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த அவச்சொல் அகலவேண்டும் என்றால், இந்தியாவில் அன்னை சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும்...' என்று பிரசாரம் செய்தேன். சோனியா காந்தி வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் அரசு அமைந்து, நான்கு ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பிலும் இருந்துவிட்டது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகாலத்தில் ராஜீவ் கொலைக்குக் காரணமானவர்கள் பற்றி ஒருநாளாவது காங்கிரஸ்காரர்கள் பேசியதில்லை. தி.மு.க. ஆட்சியை மிரட்ட வேண்டும் என்றால் மட்டும் புலிகளைப் பிடித்துக்கொள்கிறார்கள். இதைத்தான் நான் கண்டிக்கிறேன்'' என்றவர், சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா விஷயத்துக்கு வந்தார்.


''அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இன்று சேர்ந்து விருந்து சாப்பிட்டு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ராஜீவ் கொலையைக் காரணம் காட்டி எதிர்ப்புக் குரல் கொடுக் கிறார்கள். ஆனால் இதே சுவாமி, ராஜீவ்காந்தி கொலையான சில மாதங்களில் ஜெயலலிதாவைக் குற்றம்சாட்டியது பொய்யா? ஜெயின் கமிஷன் முன்பு சுவாமி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், 'ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகளோடு சேர்ந்து செயல்பட்டவர் ஜெயலலிதா. அதனால், ஜெயலலிதாவையும் குற்றவாளியாகக் கருத வேண் டும்...' என்று சொல்லியிருந்தார். அந்த அஃபிடவிட் மீது ஐந்து நாட்கள்விசாரணை நடந்தது. ஆனால், ஜெயலலிதாவுக்காகப் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடி, கமிஷன் முன்பு ஜெயலலிதா ஆஜராவதிலிருந்து விலக்குப் பெற்றார்.

அதேநேரம், நான் ஜெயின் கமிஷன் முன்பாக ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தேன். அதில், 'ராஜீவ்காந்தி கொலை நடக்கப்போகும் விவரம், சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்பே தெரியும்...' என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தேன். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜெயின், விசாரணைக்கு சுவாமியை வரவழைத்தார். அப்போது, ராஜீவ்காந்தி கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பும் பின்பும் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்விகள் வீசப்பட்டன. நாங்கள் அப்போது சுவாமி மீது சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் ஆதரவாக இருந்தவர் ஜெயலலிதா. ஆக, ஒருவர் மீது ஒருவர் ராஜீவ்காந்தி கொலையில் மாறிமாறி குற்றச்சாட்டுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள், இப்போது ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுகிறார்கள்'' என்று கொதித்த வேலுச்சாமியிடம்,

''அதுசரி, காங்கிரஸ்காரர்களை ஏன் இதில் வம்புக்கு இழுக்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.


''மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, அதில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் ராஜீவ் கொலை வழக்கைக் கவனிக் கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஜெயின் கமிஷன் விசாரணையின்போது கொலை தொடர்பாகப் பெறப்பட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்காமல் மத்திய அரசு இழுத்தடித்தது. இறுதி யில் அந்த ஆவணங்களெல்லாம் காணாமல் போய் விட்டதாக சொல்லிவிட்டார்கள். ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது பதிவான வீடியோ ஆதாரம் ஒன்றை சி.பி.ஐ. கைப்பற்றியது. அதைத் தாக்கல் செய்த போது, சில காட்சிகளை யாரோ அழித்திருந்தது தெரிந் தது. காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் ராஜீவின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடி ஏற்பட்டதாக பல அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டார்கள். அவர் களில் பலருக்கும் காங்கிரஸ் அரசே பதவி உயர்வு அளித்தது. இவ்வளவுதான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் கொலையின் உண்மைகள் வெளியாவதில் இருந்த அக்கறை. ப.சிதம்பரமோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ எப்போதாவது இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருப்பார் களா? தங்களுக்கு அரசியல்ரீதியாக பேசுவதற்கு விஷயம் இல்லையென்றால், 'தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம்...' என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.


ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமிக்கு முன் கூட்டியே தகவல்கள் தெரியும் என்று சொன்ன அதே ஆதாரங் களை வைத்து, சந்திராசாமி யையும் கமிஷன் முன்பு ஆஜராக வேண்டுமென்று சொன்னேன். அவரால், நான் வைத்த ஆதாரங்களை மறுக்க முடியவில்லை. ஏற்கெனவே புலிக ளோடு தொடர்பில் இருந்த அதே சந்திராசாமி, இப்போது இலங்கை அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறார். இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான ஒருவர், சமீபத் தில் சந்திராசாமியை டெல் லியில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் வைத்து சந்தித் திருக்கிறார். நான் கமிஷன் முன்பாகக் கொடுத்த வாக்குமூலம், கோவிந்தன் குட்டி என்பவர் எழுதிய 'இன்டிமேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் அப்போது வெளியாகி இருந்த சுப்பிரமணியன் சுவாமி பற்றிய விவரங்கள் ஆகிய விஷயங்களை மத்திய அரசு தீவிர மாக விசாரிக்கவேண்டும் என்று ஜெயின் கமிஷன் அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக் கண்காணிப்புக் குழு, இன்றுவரை இது தொடர்பாக விசாரிக்கவே இல்லை.


இதுபற்றியெல்லாம் சிந்திக்காமல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனியும் அரசி யல் லாபம் மட்டுமே கருதி பேசிக்கொண்டிருந் தால் அவர்களைத் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம்'' சஎன்று எச்சரிக்கும் தொனியில் முடித்தார் வேலுச்சாமி.
- ஜூனியர் விகடனில் வேலுசாமி பேட்டி

Sunday, February 17, 2008

'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'

வேலூர் தங்கக் கோவிலில் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் 320 ஏழைக் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கருணாநிதி துவக்கி வைத்தார். நாராயணி பீடத்தின் தலைவர் சக்தி அம்மாவின் சார்பில் மொத்தம் 320 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 207 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிதி உதவிகளை கருணாநிதி வழங்கினார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

அன்பு என்பது ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது. நான் அன்பு காட்டினால், அதைப்போல அன்பு காட்டப்படுகின்றவர் என்னிடம் அன்பு காட்டினால் அங்கே பரிமாறிக் கொள்ளப்படுகின்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. கருணை என்பது ஒருவர் கொடுப்பது, அவர் திரும்பப் பெறுவதில்லை. திரும்ப தராத நிலையில் ஒருவர் பெற்றுக் கொள்வது, அது கருணை.

இங்கே எனக்கும், இந்த பீடத்தினுடைய அதிபருக்கும் இடையிலே இருப்பது அன்பு. நான் அவரிடத்திலே அன்பு காட்டுகிறேன். அவரும் என்னிடத்திலே அன்பு காட்டுகிறார். நான் அன்பு காட்டுவதற்கு காரணம் அவர் ஏழை-எளிய, நலிந்த மக்கள் இடத்திலே கருணை காட்டுகிறார். இப்போது அன்புக்கும், கருணைக்குமுள்ள வேறுபாடு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

அதனால்தான் மூன்றாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தபோது அருள்திரு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களை அழைத்து ஏழை குழந்தைகளுக்காக, ஆலயங்கள் பராமரிப்பில் கருணை இல்லங்களைத் தொடங்கினேன். முதல் முதல் மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அந்த இல்லம் தொடங்கப்பட்டது. அப்போது வாரியார் தான் அந்த இல்லத்திற்கு கருணை இல்லம் என்று பெயர் சூட்டினார்.

பல ஆலயங்களிலே அந்த கருணை இல்லங்கள் உருவாக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.
அதன் மூலம், ஆன்மிகம், அறிவியல் என எதைப் படித்தாலும், உணவுடன் கல்வி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களின் காரணமாக அந்த கருணை இல்லங்கள் பல இடங்களில் சரியாக செயல்படவில்லை. அதனை அறநிலையத்துறை அமைச்சரிடத்திலே சொல்லியிருக்கிறேன். அவர் கவனிப்பதாகச் சொன்னார். கவனித்திருப்பார் என்று நம்புகிறேன்.

இன்றைய தினம் இந்த இடத்திலே 320 நலிந்த குடும்பங்களைச் சார்ந்த சிறார்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது என்பதும், அதற்காக அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது என்பதும் சாதாரணமான விஷயமல்ல.

நோய் வந்ததை புரிந்து கொள்ளாமல், `காத்தவராயன்' ஆவி வந்தது என தெய்வங்கள் மீது பழி சுமத்திய காலமும் உண்டு. இப்போது அனைத்தும் புரிந்து கொள்ளும் உலகமாக மாறிவிட்டது.

நாங்கள் இப்போது 5வது முறையாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கும் நிலையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். நலிந்த குடும்பத்தில் உள்ள சிறார்களுக்கு இதய நோய் வந்தால், அவர்களைக் காப்பாற்ற என்ன அளவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை மருத்துவக் குழு மூலம் அறிந்து, சாதாரண சிகிச்சை போதுமா, அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா என்பதை அறிந்து அதற்குத் தேவையான நிதியாக ரூ.10,000 முதல் ரூ.70,000 வரை தமிழக அரசு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஒரு அரசே இத்தனையும் செய்ய முடியுமா? அப்போது தான் நாராயணி பீடம் தேவைப்படுகிறது. அந்த தேவையை நிறைவு செய்கிற-நாமெல்லாம் எண்ணி மகிழ்கின்ற நல்ல காரியத்தை இந்தப் பீடத்தின் அதிபர், இளமையிலேயே துறவு கோலம் பூண்டு, இளமையிலேயே ஆன்மிகப் பற்றாளராக மாறி இன்றைக்கு அந்த தொண்டினை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

இங்கு பேசிய சிலர் ஆன்மிகம்-அறிவு என்ற இரண்டையும் இணைத்துப் பேசினார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகம், அறிவு இரண்டும் இரட்டைக் குழந்தைகள். அதிலே எந்த விதமான வேறுபாடும் இல்லை.

இரட்டைக் குழந்தைகளே தவிர, ஒட்டிப் பிறந்த குழந்தைகள் இல்லை. தனித்தனியான குழந்தைகள்தான். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள். ஒன்று ஆன்மிகம்-ஒன்று அறிவியக்கம். ஆன்மிகத் துறை, அறிவியக்கத் துறை என்ற இரண்டு துறைகளும் ஒன்றுக் கொன்று மோதிக் கொள்ளக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்றால், ஒன்றுமே செயல்பட முடியாமல் போய் விடும். ஏதாவது செயல்பட வேண்டுமேயானால் இரண்டும் தனித்தனியாக இருந்தால் தான் செயல்பட முடியும். அதனால் தான் சென்னையிலே அண்ணா அறிவாலயம் இருக்கிறது, வேலூரில் இந்த தங்கக் கோயில் இருக்கிறது.

இரண்டும் தனித் தனியாக இருந்து மக்களுக்கு, ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

நாராயணி பீடத்திற்கு கருணாநிதி வருகிறானே என்று சில பேர் மகிழ்ச்சி அடைவார்கள், சில பேர் கேள்விக்குறி ஆவார்கள், சில பேர் அதிர்ச்சி அடைவார்கள் என்றெல்லாம் நம்முடைய அடிகளார் சொன்னார், பரவாயில்லை. அவர் உலகத்தைத் தெரிந்து வைத்திருக்கிறாரோ இல்லையோ, தமிழ்நாட்டை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறார்.

அதிலும் தமிழ்நாட்டு அரசியலை நேர்த்தியாகப் புரிந்து வைத்திருக்கிறார், அதிலும் இந்த 32 வயதிலே என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாராயணி என்பதாலேயே நான்-நாராயணியின் உருவத்திலே இருக்கின்ற கடவுளை ஏற்றுக்கொண்டேன் என்பதல்ல. பல மடாதிபதிகள், பண்டார சன்னதிகள், துறவிகள் இவர்கள் எல்லாம் கலந்து கொண்ட ஒரு மாநாடு சென்னையில் கற்பகாம்பாள் மண்டபத்தில் 1970ம் ஆண்டு வாக்கில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் முதல், சாந்தலிங்க அடிகளார் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். இதில் நான் பேசும்போது குறிப்பிட்டேன். கருணாநிதி கடவுளை ஏற்றுக்கொள்கிறானா என்பதல்ல பிரச்சினை. கடவுள் கருணாநிதியை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு, அவன் கடமை ஆற்றுகிறானா என்பது தான் பிரச்சினை.

பிரச்சினை கடவுள் கருணாநிதியை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது தான். கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன, 300 கோடிக்கு மேல் மக்கள் இருக்கின்ற இந்த உலகத்திலே ஒரு கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டால், கடவுள் என்ன அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய் விடுமா?. அந்த ஓட்டெடுப்பு எல்லாம் தேவையில்லை.

நாம் நமக்கு நல்ல உள்ளத்தோடு, நம்முடைய காரியங்களைச் செய்தால் அது தான் கடவுள். உண்மை ஒன்றே தெய்வம் என்று பாரதி பாடினார். ராமலிங்க அடிகளும் அதைத்தான் சொன்னார். 'அருட் பெருஞ்சோதி, தனிப் பெருங்கருணை' என்று மொழிந்த வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார், அறிவு ஒளியைத் தான், உண்மை ஒளியைத் தான் தெய்வம் என்றார்.

'நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே, சுத்தி வந்து மொண மொண வென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்' என்றார் சிவ வாக்கியர். அவரை சித்தர் என்கிறோம், ஆனால் அதை நாங்கள் எடுத்துச் சொன்னால், எங்களை பித்தர் என்கிறார்கள்.

இதைப் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் எடுத்துக் காட்டுகிறேன். நல்லவைகளைச் செய்யும்போது, அவர்கள் நாத்திகர்களா, ஆத்திகர்களா, அவர்கள் செய்கின்ற காரியம் என்ன என்பதில் தான் நாம் முனைப்பாக கருத்து செலுத்த வேண்டும்.

அந்த வகையிலே தான் நாராயணியை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்றால், இப்படி ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் ஒவ்வொரு நாளும் காலையில் யோகா வகுப்பில் பயிற்சி பெற்று வருகிறேன். தேசிகாச்சாரி என்று ஒரு பிரபலமானவர் எனக்கு யோகா சொல்லித் தருகிறார். அவருடைய தந்தையும் யோகா ஆசிரியர். அவர் யோகா ஆசிரியராக இருந்த காரணத்தால் 102 வயது வரையிலே வாழ்ந்தவர். அந்த ஆசையிலே நான் யோகா கற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்காக உழைக்க உடலில் வலு இருக்க வேண்டுமே என்பதற்காக யோகா கற்றுக் கொள்கிறேன்.

கற்றுக்கொடுக்கின்ற தேசிகாச்சாரியார் முதல் நாள் எனக்கு பாடம் சொல்லும் போது, இரண்டு கைகளையும் உயர்த்தி, தாழ்த்தி, இப்படி இப்படி அசைத்து, பயிற்சி பெற வேண்டுமென்று சொல்லும்போது, அவர் சொல்லிக் கொடுத்த வாக்கியம் 'நாராயண நமஹ, நாராயண நமஹ' என்பதாகும். ஆனால், அதைச் சொல்லுவதில் எனக்கு சங்கடம். அதை சொல்லிவிட்டு மறைக்கவும் என்னால் முடியாது. அவரிடம் என்னுடைய கொள்கையை திணிக்க முடியாது.

'ஏங்க, நாராயண நமஹ என்று தான் சொல்ல வேண்டுமா? நாராயண நமஹ என்றால் என்ன? என்றேன்.

ஒன்றும் இல்லீங்க, சூரிய நமஸ்காரம் என்றார்.

நானும் சூரிய நமஸ்காரம் பண்ணுகிறவன் தானே, எனக்கும் சூரியனை மிகவும் பிடிக்குமே, நாராயண நமஹவுக்கு பதிலாக ஞாயிறு போற்றுதும் என்று சொல்கிறேனே என்றேன்.

சரி, சொல்லுங்கோ என்றார். அவ்வளவு தான், தினந்தோறும் காலையிலே யோகா வகுப்பு நடக்கும்போது, அந்த பயிற்சிக்கு நான் சொல்கிற வாசகம், 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்பது தான்.

இப்போது, தேசிகாச்சாரியாரும் இதைத் தான் சொல்லி வருகிறார் என்பது வேறு விஷயம்.

எனக்கு பிடித்ததை நான் சொல்கிறேன், அவருக்கு பிடித்ததை அவர் சொல்கிறார்-இரண்டும் ஒரே விளைவு தான். இரண்டும் ஒன்று தான். ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டால் அப்போது இரண்டும் ஒன்றில்லை. அதனால் தான் சொல்கிறேன்.

அன்பு, பரிமாறிக் கொள்ளக் கூடியது, கருணை ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெற்றுக் கொள்ளக் கூடியது. அன்புக்கும், கருணைக்கும் வேறுபாடு தெரிந்து நடைபெறுகிற இந்த அருமையான ஆலயத்தில் இந்த இனிய வரவேற்பைப் பெற்றமைக்காகவும், இந்த வரவேற்பைத் தருவதற்கு நம்முடைய அடிகளார் அவர்கள் முன் வந்ததற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை தம்பி துரைமுருகனைப் போன்றவர்கள் செய்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

Sunday, February 10, 2008

‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?


‘அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாய மல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல’ என்கிறீர்களே. எப்படி?

‘‘மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடிகோடியாக பணத்தை வாரிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தம்பியிடம் (பிரபாகரனிடம்) ‘ஆயுதப்புரட்சி மூலம் தமிழ் ஈழத்தைப் பெற எவ் வளவு பணம் வேண்டும்?’ என்று கேட்டார். தம்பி கொஞ்ச நேரம் யோசித்து ‘நூறுகோடி தேவைப்படும்’ என்றார். ‘சரி பார்க்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். அந்த அளவுக்கு தமிழ்ஈழம்தான் ஒரே தீர்வு என்று நம்பியவர் எம்.ஜி.ஆர்.

அந்த மாமனிதரால் நிறுவப்பட்ட அ.தி.மு.க.வின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா ஏன் புலிகளை எதிர்க்கிறார்? புலிகளை அவர் ஆதரிக்க வேண்டாம். சட்ட மன்றத்தில் அவர்களுக்கு எதிராக, தேவையில்லாமல் சர்ச்சை எழுப்பாமலாவது இருக்கலாமே. ஒருகாலத்தில் ஜெ.வும் புலிகளை ஆதரித்தவர்தான். 1989_ம் ஆண்டு லண்டனில் நடக்க இருந்த தமிழ்ஈழ விடுதலை மாநாட்டில் நானும் கலந்துகொள்ள வேண்டுமென்று மறைந்த தம்பி ஜானியை பிரபாகரன் என்னிடம் அனுப்பி வைத்தார்.

ஒருநாள் நான் புரட்சித்தலைவியோடு பேசிக் கொண்டிருந்தபோது, இதைச் சொல்லி ‘நான் லண்டன் போய் வரட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆமாம். ஜானி என்னைக்கூட வந்து பார்த்தார். நீங்கள் போவதென்றால் மகிழ்ச்சி, போய் வாருங்கள்’ என்றார். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். இப்போது ஏன் அப்படி மாறிப்போனார் என்பது புரியவில்லை. நான் மீண்டும் அவருக்குச் சொல்கிறேன். நீங்கள் ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருங்கள்.

இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்டிருப்பார்கள். காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து ‘ஒரு கொலையை’ மட்டும் வைத்துக் கொண்டு, தமிழர்களை அழிப்பதற்குத் துணை போகாதீர்கள். ஒரே சரக்கை எத்தனை காலத்துக்குத்தான் விற்பனை செய்வது?’’

தமிழ் ஈழத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர். இந்திய _ இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஆதரித்தார்? முரண்பாடாக இருக்கிறதே?

‘‘அந்த ஒப்பந்தத்தை எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் என்பதால், ‘ஒப்பந்தத்துக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டால் நீங்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். வேறு ஒருவரைத் தேர்வு செய்யுங்கள்’ என்று ராஜீவ் காந்தி நெருக்கடி கொடுத்தார். ஏன்? மிரட்டினார் என்றுகூடச் சொல்லலாம். அந்தநிலையில் வேறு வழியில்லாமல்தான் எம்.ஜி.ஆர். அதை ஆதரித்தார். இந்திய _ இலங்கை ஒப்பந்தம் ஜூலை 29_ம்தேதி கையெழுத்தானது. அதைக் கொண்டாட சென்னையில் ஆகஸ்ட் 2_ம்தேதி ஒரு பாராட்டுவிழாவை ராஜீவ் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கருதிய எம்.ஜி.ஆர்., ஜூலை 31_ம்தேதியே மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாரானார். அன்று மாலை ஐந்து மணியளவில் ராமாபுரம் தோட்டத்திலிருந்து புறப்பட்டு அவர் தாமஸ்மலை வரை வந்தபோது எம்.ஜி.ஆரின் கார் டெல்லியில் இருந்து வந்த உத்தரவால் வழிமறிக்கப்பட்டது. ‘அமெரிக்காவுக்குப் போகக் கூடாது. விழாவில் பங்கேற்கவேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டதால் வேறுவழியில்லாமல் அவர் தோட்டத்துக்குத் திரும்பினார். விழாவிலும் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் ராஜீவ்காந்தியின் கையோடு எம்.ஜி.ஆர். கரம்கோத்துத் தூக்காமல் இருந்த நிலையில் ராஜீவ்காந்தியே அவரது கையைப் பிடித்துத் தூக்கிய காட்சி இன்றும் என் கண்ணில் நிற்கிறது. இந்திய ராணுவத்தால் ஈழப்பெண்கள் கற்பழிக்கப்படுவது பற்றி ராஜீவ்காந்தியிடம் பொன்மனச்செம்மல் அழாதகுறையாக முறையிட்டார். அதற்கு ராஜீவ்காந்தி கூறிய பதிலை நான் இங்கே கூற விரும்பவில்லை.’’

அதற்காக ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தி விட முடியுமா?

‘‘நான் ராஜீவ் கொலையை ரசிக்கவும் இல்லை, அதற்காக மகிழவும் இல்லை. அது நேர்ந்திருக்கக் கூடாத நிகழ்வு. ஒரு துன்பியல் முடிவு. ராஜீவ் மரணத்துக்காக காங்கிரஸ் நண்பர்களுடன் சேர்ந்து நானும் அழத் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஏழாயிரம் தமிழர்களுக்காக நீங்கள் என்னுடன் சேர்ந்து அழத் தயாரா? தமிழர்களின் உயிர் அவ்வளவு மலிவானதா?

அண்ணல் காந்தியை மதவெறியன் கோட்ஸே, அவனது கையில், ‘இஸ்மாயில்’ என்று பச்சை குத்திக் கொண்டு சுட்டுக் கொன்றான். அவன் யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்வாதிகாரியான சாவர்க்கரின் சீடன். வாரிசு. அந்த இயக்கத்தின் தத்துப்பிள்ளையாக வந்த பாரதிய ஜனதா, கோட்ஸேவின் குருவான சாவர்க்கரின் படத்தை நாடாளுமன்றத்தில¢ திறந்ததே. அதை காங்கிரஸால் ஏன் தடுக்க முடியவில்லை? காங்கிரஸ் ஏன் வெட்கப்பட வில்லை?

இந்திரா காந்தியைக் கொன்ற பியாந்த்சிங்குக்கு என்ன நடந்தது? இந்திரா நினைவு நாளை காங்கிரஸ் கொண்டாடிய அதே நாளில், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி பியாந்த்சிங் நினைவு நாளை கடைப்பிடித்தது. அவனது இரண்டு பிள்ளைகளை பிரபந்தக் கமிட்டி தத்தெடுத்துக் கொண்டது. இதற்காக காங்கிரஸாருக்கு வெட்கப்படவோ, வேதனைப்படவோ தெரியவில்லை. இதைத் தடுக்க அவர்களால் முடியவில்லை.

அது மட்டுமா? மன்மோகன்சிங் பிரதமராக வந்த போது, இந்திராகாந்தி படுகொலையின் போது பறிக்கப் பட்ட இரண்டாயிரம் சீக்கியர்களின் உயிர்களுக்காக பகிரங்கமாக, பட்டவர்த்தனமாக சீக்கிய சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட என் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் என்ன பாவம் செய்தார்கள்? தமிழ் மக்கள் உயிர் என்றால் அவ்வளவு கேவலமா? மணிமேகலை காப்பியத்தில் உதயணகுமாரன் கொலையாகும்போது, அவனது உடலைப் பார்த்து அவனது தாயார் சோழமாதேவி அழுது புலம்புவாள். அவளிடம் மணிமேகலை, ‘உடலுக்காக அழுகிறாயா? உயிருக்காக அழுகிறாயா?’ என்று கேட்பாள். அற்புதமான கேள்வி அது. ‘நீ அழுவது உதயணகுமாரனின் உடலுக்காக என்றால், அந்த உடல் எங்கும் போய் விடவில்லை. இங்கேதான் இருக்கிறது. உயிருக்காக அழுகிறாய் என்றால், நீ எல்லா உயிர்களுக்காகவும் அழு’ என்று அறிவுறுத்துவாள். நானும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் ராஜீவ்காந்தியின் உடலுக்காகவா அழுகிறீர்கள்? இல்லை, உயிருக்காகத்தான் அழுகிறீர்கள். அப்படியானால் எங்கள் தமிழ்ச்சாதி மக்கள் ஏழாயிரம் பேர் உயிர்களுக்காகவும் அழுங்கள். அழ மாட்டீர்களா? அழ வேண்டாமா?’’

ஒரு காலகட்டத்தில் ராஜீவ்காந்தியே புலிகளுடன் சமரசம் செய்ய முன்வந்தார் என்கிறார்களே?

‘‘உண்மைதான் அது. இந்திய ராணுவம் புதை மணலில் காலை விட்டு மாட்டிக்கொண்டது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, புலிகளோடு சமரசம் செய்து கொள்ள ராஜீவ் விரும்பினார். ஒருநாள் என் நண்பர் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் அழைப்பையேற்று மந்தைவெளியில் உள்ள அவரது அலுவலகத்துக்குப் போனேன். புலிகளுடன் ராஜீவ் போர்நிறுத்தம் செய்ய விரும்புகிறார். இதுபற்றி டெல்லியில் ராஜீவ்காந்தியோடு சிதம்பரம் பேசிவிட்டு, எஸ்.ஜி.வினாயகமூர்த்திக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். நீங்கள் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அந்த இயக்கத்தின் சார்பில் நீங்கள் பேச முடியுமா?’ என்றார்.

நான் இரண்டு மணிநேரம் அவகாசம் கேட்டு உடனே திருவான்மியூருக்குச் சென்றேன். அங்கே வீட்டுக்காவலில் இருந்த தம்பி கிட்டு, கோலை ஊன்றியபடி வந்து நலம் விசாரித்தார். போர் நிறுத்த கோரிக்கை பற்றி கிட்டுவிடம் கூறினேன். ‘அண்ணே! உங்களுக்குத் தெரியாதா? இந்தியாவை எந்தக் காலத்திலாவது நாம் எதிர்க்க நினைத்திருப்போமா? இந்தப் போரை நாம் விரும்பியா ஏற்றுக் கொண்டோம்? இது நம்மீது திணிக்கப்பட்ட போர்’ என்று வருத்தப்பட்டார்.

‘சரி. இயக்கத்தின் சார்பில் நான் டெல்லி சென்று சமரசப் பேச்சில் கலந்து கொள்ள முடியுமா?’ என்றேன். கிட்டு உடனே உள்ளே சென்று வவுனியாவில் இருந்த தம்பியிடம் (பிரபாகரனிடம்) பேசி அனுமதி பெற்றார். ‘இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கை இணைத்து ‘மிழீழத் தாயகம்’ என அறிவிக்க வேண்டும். ஈழப்பகுதிகளில் உள்ள இருநூறு சிங்கள ராணுவ முகாம்களை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர் மறுவாழ்வு நிதியாக நூறுகோடி ரூபாய் நிதி தரவேண்டும் என்று கோரிக்கைகளை கிட்டு எழுதித் தந்தார். முக்தா சீனிவாசனிடம் போய்ச் சொன்னேன். அவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

இரண்டுநாள் கழித்து ஒருநாள் மாலை டெல்லி புறப்படத் தயாரானேன். அன்று பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் பதிவை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.30 மணிக்கு வீடு வந்தேன். எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவி தமிழரசிக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனே விஜயா மருத்துவமனையில் சேர்த்து நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன். ஒத்திவைத்த டெல்லிப் பயணம் ரத்தானது. ஒரு சம்பவம் தவறிப்போனதால¢ ஒரு சரித்திரமே தவறிப்போனதே என்று வேதனையடைந்தேன். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு முக்தாவே சாட்சி. பழங்காலத்தில் மன்னர்களுக்கிடையே போர் ஏற்படும்போது புலவர்கள் சந்து (சமரசம்) செய்ததுபோல இந்த ஏழைப்புலவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தும் அது கைநழுவிப்போனது.’’

புலிகளைக் காரணம் காட்டி காங்கிரஸார் தி.மு.க. அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்களே?

‘‘பாவம். காங்கிரஸ்காரர்களுக்கு நீண்டகாலமாக ஆட்சிப்பசி, அதிகாரப்பசி இருக்கிறது. நாற்பத்தியரு ஆண்டுகாலமாக தமிழகத்தில் நாட்டாமை செய்யும் வாய்ப்பை இழந்து தவிக்கிறார்கள். இப்போது கூடு விட்டுக் கூடு பாய (கூட்டணி மாற)த் துடிக்கிறார்கள். அதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? அந்த வகையில் விடுதலைப்புலிகள் அவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிற பாசமிகு தோழர்களே! நீங்கள் சத்தியமூர்த்தி பவனை யுத்தபூமியாக்காமல் பார்த்துக் கொண்டால் போதும்.’’

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் புலமைப்பித்தன் பேட்டி

Friday, February 1, 2008

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!


ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!


“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?


பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.


‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.


அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.


இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.


பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.


தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.


தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.


தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.


தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.


பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.




இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.


இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.


“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .


என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!


“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”


பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!


தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்
கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.


“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.


“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.


ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!


பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)


தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.


தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.



அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.


தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.


இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)