Friday, August 6, 2010

தமிழகத்தின் போபால் நோக்கியா?

வினவு குறிப்பு: சென்னை நோக்கியா ஆலையில் சமீபத்தில்தான் வேலை நிறுத்தம் ஒன்று நடந்திருந்தது. அது குறித்து வினவின் சென்னை செய்தியாளர்கள் குழு ஒன்று செய்தி சேகரிக்கச் சென்ற போது ஆலையில் உள்ள தொழிலாளிகள் பெரும் விபத்து ஒன்றை அல்லது சதியை எதிர் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டுரைக்காக சுங்குவார்சத்திரம், நோக்கியா ஆலை, ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று நேரில் பார்த்தும் விசாரித்தும் இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதை ஆலை நிர்வாகிகள் எதிர்த்தாலும் விடமால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தோழர்களைத் தவிர அங்கே எந்த செய்தியாளர்களும் இல்லை.

_________________________________________________________

அதிர்ச்சியில் உறைந்து போனோம்!

மொத்தம் ஆறு தொழிலாளர்கள். அவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் அனைவருமாக சேர்ந்து சக பெண் தொழிலாளி ஒருவரை தூக்கிக் கொண்டு வேகமாக நோக்கியா நிறுவனத்திலிருந்து ஓடி வந்தார்கள். வேறு யாருமே உடன் வரவில்லை. இந்த ஏழு பேருக்கும் அதிகம் போனால் 24 வயதுதானிருக்கும். அனைவரது உடலிலும் வறுமை குடி கொண்டிருந்தது. கண்களில் இயலாமை, பரிதவிப்பு. அடுத்து எந்தத் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்க மடைவாரோ என்ற பதட்டம் அவர்களது இதயத்தை பலமாக துடிக்க வைத்தது.

கைகள் நடுங்கியபடியே அந்தப் பெண் தொழிலாளியை சுமந்தபடி எத்தனை கிலோ மீட்டர்கள் ஓடி வந்தார்கள் என துல்லியமாக சொல்ல முடியவில்லை. இரும்பு வேலியிட்ட தொழிற்சாலையின் கதவுக்கு வெளியே ‘ஜெயா மருத்துவமனை’ ஆம்புலன்ஸ் வண்டி நின்றிருந்தது. அந்த ஆம்புலன்சை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

எனவே உள்ளடங்கியிருந்த தொழிற்சாலையில் மயக்கமான அப்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு அந்த ஆறு பேரும் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு சுமந்தபடி ஓடி வந்தார்கள். அப்பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகும் அவர்கள் சமாதானமாகவில்லை. ஆம்புலன்சில் உடன் சென்ற தன் நண்பரிடம், ஒரு தொழிலாளி, ”மச்சான்… ‘ஜெயா மருத்துவமனை’ வேண்டாம்டா… நேரா ராமசந்திரா கூட்டிட்டுப் போங்க…” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆம்புலன்ஸ் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பறந்துவிட்டது. காற்றில் மிதந்த தனது சொற்களை திரும்பவும் சேகரித்த அத்தொழிலாளி தனது கைப்பேசி மூலம், ஆம்புலன்சில் சென்ற தன் நண்பனை அழைத்து மீண்டும் அதையே சொன்னார்.

நோக்கியா ஆலை விபத்தின் ஆரம்பம்!

கடந்த சனிக்கிழமை (24.07.10) மாலை 6 மணிக்கு நோக்கியா என்ற பன்னாட்டு நிறுவனத்தின் வாசலில் நடந்த சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னால் வரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சாலையின் வாயிலில் குழுமியிருந்தார்கள். பணிக்கு திரும்ப மாட்டோம் என்ற உறுதி அனைவரிடமும் தென்பட்டது. ஆனால் தி.மு.க.வின் கொடி பறந்த காரிலிருந்து இறங்கிய கரை வேட்டி மனிதர், ‘அனைத்தையும்’ தான் பார்த்துக் கொள்வதாகவும், ‘இனி எதுவுமே’ நடக்காது என்றும் சொன்ன பிறகு தொழிலாளர்களின் உறுதி நொறுங்கியது. வேறு வழியின்றி தொழிற்சாலைக்குள் சென்றார்கள்.

கரை வேட்டியின் நடிப்புக் கருணை கனவானின் கார் சென்ற 15 நிமிடத்தில் மீண்டும் அந்த கொடூரம் நிகழ ஆரம்பித்தது. மீண்டும் ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயக்கமானார். அவரை ஆறு தொழிலாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வரை சுமந்து வந்தார்கள். மற்றவர்களை வெளியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

விஷவாயு கசிவுதான் இதற்கு காரணம். 1984ம் ஆண்டு போபாலில் அரங்கேறியதே ஒரு கொடூரம், அதற்கு சற்றும் குறையாத சம்பவங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெற ஆரம்பித்திருப்பதன் அறிகுறிதான் மேற்கண்ட சம்பவம்.

நோக்கியாவும் அதன் சகோதரத்துவ நிறுவனங்களும்!

‘நம்ம நாட்டு செல்ஃபோன்’ என்ற அடைமொழியுடன் இந்திய சந்தையில் கோலோச்சும் நோக்கியா நிறுவனத்தின் கிளை, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருக்கிறது. ஃபெர்லெக்ஸ், ஸ்கல்காம், டெர்லாஸ், ஃபாக்ஸ்கான் ஆகியவை நோக்கியா நிறுவனத்துடன் தொடர்புடைய துணை நிறுவனங்கள். இந்த துணை நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், நோக்கியா தொழிற்சாலையின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கின்றன. சந்தைக்கு வரும் நோக்கியா கைப்பேசியின் உதிரி பாகங்களை இந்த துணை நிறுவனங்கள் தங்களுக்குள் பங்கிட்டு தயாரிக்கின்றன.

இதில் ஃபாக்ஸ்கான் என்ற துணை நிறுவனத்தின் சைட் 3இல்தான் கடந்த வெள்ளிக்கிழமை (23.07.10) மதியம் ஒன்றரை மணிக்கு மேல் அந்தக் கொடூரம் நிகழ ஆரம்பித்தது. முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் பணிக்கு திரும்பியிருந்தார்கள். சீராக இருக்க வேண்டிய சுவாசம், எக்குத்தப்பாக மாறியது. பலருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. கண்கள் எரிந்தன. திரண்ட உமிழ்நீரில் ரத்தம். அது குளிர்பதனம் பொருத்தப்பட்ட தொழிற்சாலை. எனவே உள்ளிருக்கும் காற்று வெளியேறவும், வெளியிலிருந்து காற்று உள்ளே வரவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

காரணம் தெரியாத விபத்தும், பாதிப்படைந்த தொழிலாளிகளும் !

ஏதோ விபரீதம் என தொழிலாளர்கள் உணர்வதற்குள், யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், பணியிலிருந்த ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். பதறிப் போன மற்ற தொழிலாளர்கள், அவரை அணுகி என்ன ஏது என்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களுக்கு எதுவும் புரியவில்லை.

என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய நிர்வாகம் அலட்சியமாக இருந்தது. ‘இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? அதான் விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம் விழுந்துட்டாங்க… மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…’ என்று சூபர்வைசர்கள் ஷிப்டுக்கான உற்பத்தி குறைந்துவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் மற்ற தொழிலாளர்களை வேலை செய்யும்படி மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், சிவா என்கிற ஷிப்ட் மானேஜரும், மாரிமுத்து என்ற ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழவே பதட்டம் அதிகரித்தது. தொழிலாளர்கள் மயங்கி விழுந்தபோது அவர்களை கண்டுக்கொள்ளாத நிர்வாகம், ஷிப்ட் மானேஜரும், ஷிப்ட் லீடரும் மயங்கி விழுந்ததும் பதறியது. உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு தகவல் பறக்க, ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவர்களை அழைத்துச் சென்றது. இதற்கு மேலும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை உணர்ந்துக் கொண்ட நிர்வாகம், மயங்கி விழுந்த தொழிலாளர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

இப்படியாக சிகிச்சைக்கு சென்ற தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து முதல் ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்கள் பணி செய்ய மறுத்து, தொழிற்சாலையை விட்டு வெளியே வந்தனர். நிர்வாகமும் அதன் பின் முதல் ஷிப்டை தொடர விரும்பாததுடன், இரண்டாவது ஷிப்டையும் ரத்து செய்தது. தொழிலாளர்கள் உடனே ஜெயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் நுழையவிடாமல், மருத்துவமனையின் செக்யூரிட்டி அடித்து விரட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இப்படி செய்யும்படி மருத்துவமனையும், தொழிற்சாலை நிர்வாகமும் செக்யூரிட்டிகளிடம் கட்டளையிட்டிருக்கிறது. இதை மீறியே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்குள் மற்ற தொழிலாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஆனால் ரத்த வாந்தி எடுத்து மயக்கமான எந்தத் தொழிலாளிக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவேயில்லை. முதலுதவியுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனையறிந்த தொழிலாளர்கள் ஆவேசத்துடன் மருத்துவர்களிடம் நியாயம் கேட்டபோது கிடைத்த பதில்: “நிர்வாகம் முதலுதவி தர மட்டும்தான் சொல்லியிருக்கு. என்ன விஷவாயு கசிந்ததுனு சொல்லலை. அது தெரிஞ்சாதான் மாற்று மருந்து தர முடியும்”.

விபத்துக்கு காரணம் ஆடி விரதமா?

மருத்துவர்கள் இதை சொல்லி முடித்த மறு விநாடி, சிகிச்சைக்கு வந்திருந்த சிவாவையும், மாரிமுத்துவையும் பார்க்க வந்திருந்த மற்றொரு நிர்வாகியை தொழிலாளார்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். “நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களில் இஸ்லாமிய தொழிலாளர்களும் அடக்கம். இவர்களுமா ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்திருப்பார்கள்? தொழிற்சாலையில் வேறு ஏதோ நடந்திருக்கிறது. விஷவாயு கசிந்திருக்கிறது. அது என்ன வாயு என்று சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்க முடியும்” என்று கதறியிருக்கிறார்கள்.

எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் அந்த நிர்வாகி சொன்ன பதில்: “இந்த யூனிட்டுக்குள்ள ஒரு ரூம் இருக்கு இல்லையா? அதுல பழைய இரும்பு சாமான்களை போட்டு வச்சிருக்கோம். இது உங்களுக்கும் தெரியும். முதல் ஷிப்ட்டுக்காரங்க சாப்பிட போயிருந்தப்ப, அந்த ரூம்ல பூச்சி மருந்து அடிச்சோம். ஏசி இருந்ததால அந்த பூச்சி மருந்தோட வாடை வெளியேற முடியலை. அதான் இப்படி ஆகியிருக்கு. டாக்டர்கள் கிட்ட இதை சொல்லியாச்சு. அவங்களும் பூச்சி மருந்தை சுவாசிச்சவங்களுக்கு மாற்று மருந்து கொடுக்கறேனு சொல்லிட்டாங்க. ஒண்ணும் பிரச்னையில்லை. அரை மணி நேரத்துல எல்லாரையும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. கவலைப்படாம போங்க. மூணாவது ஷிப்டுக்கு வர வேண்டியவங்க வந்துடுங்க…”

இந்த வாக்குறுதியை நம்ப தொழிலாளர்கள் தயாராக இல்லை. சைட் 3இல் நடைபெற வேண்டிய மூன்றாவது ஷிப்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்கள் வரவில்லை. எனவே சைட் 2லிருந்து பல தொழிலாளர்களை சைட் 3க்கு செல்லும்படி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், காலை முதலே சைட் 3இல் நடந்து வரும் கொடூரம், சைட் 2 தொழிலாளகளுக்கு தெரிந்திருந்ததால் யாரும் சைட் 3க்கு செல்லவில்லை. நிர்வாகமும் அசரவில்லை. சைட் 3இன் 3வது ஷிப்டுக்கு வந்த தொழிலாளர்களை வைத்து உற்பத்தியை தொடங்கியிருக்கிறது.

ஆனால் முதல் ஷிப்டில் நடந்த அதே கொடூரம் மூன்றாவது ஷிப்டிலும் தொடர்ந்தது. இம்முறை பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் மயக்கமான தொழிலாளர்களின் எண்ணிக்கை 145 ஆக இருந்தது. கொந்தளித்த தொழிலாளர்கள் சைட் 3லிருந்து வெளியேறினார்கள். பாதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு மருத்துவ வசதியும், மருந்துகளும் ஜெயா மருத்துவமனையில் இல்லை.

மருத்தவமனையில் மயக்கமடைந்த தொழிலாளிகள்!

எங்கே இந்த விபரீதம் கசிந்து மீடியாவில் பரபரப்பாகி விடுமோ என்ற பயந்த நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்குப் பின் பல தொழிலாளர்களை மருத்துவமனை அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்தது. அவர்களை மற்ற தொழிலாளர்களுடன் பேச விடாமல் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் நிர்வாகம் முழு மூச்சுடன் இறங்கியது. சீரியசாக இருக்கும் தொழிலாளர்கள் மட்டும் ஐசியூவில் சிகிச்சை பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எதனால் இப்படி இருநூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விபரத்தை மருத்துவமனையும் சரி, நிர்வாகமும் சரி சக தொழிலாளர்களிடம் சொல்லவில்லை. எந்த விஷவாயு கசிந்தது… அதை சுவாசிப்பவர்களுக்கு என்ன மாற்று மருந்து தர வேண்டும் ஆகிய விபரங்கள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த நிர்வாகிகளுக்கும் தெரியவில்லை.

இந்த அடிப்படையை அலட்சியப்படுத்தி, ஆரம்பக்கட்ட சிகிச்சை முடிந்து வலுக் கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களின் மருத்துவ ரிப்போர்ட்டை எந்தக் காரணம் கொண்டும் தொழிலாளர்கள் கொண்டு செல்லக் கூடாது என்பதிலேயே நிர்வாகம் குறியாக இருந்ததை – இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இதற்காகவே நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர், கண் கொத்திப் பாம்பைப் போல வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

கொடூரம் நடந்த மறுநாள் – சனிக்கிழமை – இரவு வரை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துக் கொண்டேயிருந்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற படியே இருந்தார்கள். வாசலில் நின்றபடி உள்ளே அழைத்து செல்லப்படும் தொழிலாளர்களின் பெயரை ஒரு தாளில் எழுதியபடியே ஒரு நிர்வாகி இருந்தார். தாள்கள் நிரம்ப நிரம்ப அதை ஸ்டாப்ளர் பின் அடித்து கத்தையாக மாற்றினார். ஒரு கட்டத்துக்கு பிறகு, வெறும் எண்ணிக்கையின் அளவிலேயே அந்த நிர்வாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்க்க ஆரம்பித்தார்.

சிகிச்சைக்காக வந்த தொழிலாளர்களில் பெண்கள் அதிகம். ஐசியூவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு அடுத்த மாதம் திருமணமாம். இதுவரை அப்பெண்ணின் பெற்றோருக்கு நிர்வாகம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை என்று ஆவேசத்துடன் தொழிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஃபாக்ஸ்கான் தொழிலாளரின் சாலரி ஸ்லிப்.

தொழிலாளர்களை சுரண்டும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் இந்த பன்னாட்டு நிறுவனம், தொடர்ந்து உலகம் முழுக்க செய்திகளில் அடிபட்டபடியே இருக்கிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள் உலகம் முழுக்க இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அடிப்படை சலுகைகளை கூட வழங்காமல் நிர்வாகம் கசக்கிப் பிழிகிறது என சர்வதேச மீடியாக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றன. அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டுமே, இதுவரை உலகம் முழுக்க இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 தொழிலாளர்கள், பணியிடத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறை. கடந்த மே மாதம் சீனாவில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் மாடியிலிருந்து ஒரு தொழிலாளி குதித்து தற்கொலை செய்து கொண்டதை குறித்து ‘சதர்ன் வீக்லி’ சீன இதழ், விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் இயங்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை, அசெம்பிளிங், மோல்டிங், பெயிண்டிங், ஸ்டாம்பிங், எம்பிஎம் (மொபைல் ஃபோன் மெட்டல்ஸ்), ஷீட் விண்டோ, வேர் அவுஸ், குவாலிட்டி என பல பிரிவுகளாக இயங்கி வருகிறது. நோக்கியா செல்ஃபோனுக்கான போர்ட் தவிர, மற்ற அனைத்து உதிரி பாகங்களையும் தயாரித்து தருவது இவர்களது பணி. தினமும் 3 ஷிப்டுகளில் உற்பத்தி நடக்கின்றன. சராசரியாக ஒரு ஷிப்டுக்கு நாளொன்றுக்கு நாற்பதாயிரம் செல்ஃபோன் உதிரி பாகங்கள் அனைத்து பிரிவிலுமாக சேர்ந்து தயாராகின்றன. அதாவது ஒரு நாளைய உற்பத்தி மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம்.

காஸ்ட்லியான செல்பேசிக்காக வதைபடும் தொழிலாளிகள்!

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஷிப்டுக்கு குறைந்தது ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரண்டாவது ஷிப்டில் மட்டும் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறிப்பாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை – குறைவாக இருக்கும். ஆக சென்னை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்கிறார்கள். அனைவருமே அதிகபட்சமாக முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். ப்ளஸ் 2 படித்தவர்கள் முதல், பட்டம், டிப்ளமா படித்தவர்கள் வரை இங்கு தொழிலாளியாக இருக்கிறார்கள்.

அனைவரின் சம்பளமும் ஒரேயளவுதான். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில், ஆரம்பம் முதல் பணிபுரியும் தொழிலாளிக்கு அதிகபட்சமாக ரூபாய் 6 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 6 ஆயிரம் சம்பளத்தையும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவே. பெரும்பாலானவர்களின் சம்பளம் 4,200 ரூபாயை தாண்டவில்லை. அத்துடன் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவேயில்லை. ஓராண்டு நிறைவடைந்த தொழிலாளிக்கு மட்டும் தீபாவளி சமயத்தில் ஒரு மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படுகிறது.

இப்படி ‘அநியாயமாக’ போனஸ் என்னும் பெயரில் பணம் வீணாவதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்த நிர்வாகம் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்கிறது. அதாவது ஓராண்டு முடிந்ததுமே தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது. இவர்களுக்கு பதிலாக புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது. இதற்காக ஆண்டுதோறும் அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் தருவதை நிர்வாகம் வழக்கமாக கொண்டிருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தொழிற்சங்கம் தவிர இங்கு வேறெந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். மற்ற அனைவருமே டிரெயினிஸ் – பயிற்சியாளர்கள் – என்ற பிரிவிலேயே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்படி பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தொழிற்சங்கம் கட்டவும் முடியாது, சலுகை கேட்டு போராடவும் முடியாது. இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த சாதகமான அம்சத்தையே அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையும் விதிவிலக்கல்ல. ஆனால், பயிற்சியாளர்களைக் கொண்டு உற்பத்தியை நடத்தக் கூடாது என்ற சட்டத்தை மட்டும் கவனமாக, பகிரங்கமாக மீறுகிறார்கள். இதற்கு அரசு உடந்தையாக இருக்கிறது.

காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு ஆகிய சிறு நகரங்களிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்காகவே தினமும் 45 பேருந்துகளை நிர்வாகம் இயக்குகிறது. இது தவிர சிறு சிறு கிராமங்களிலிருந்து வருபவர்களுக்காக வேன்களும் இயங்குகின்றன. இது சென்னையை சுற்றியுள்ள தொழிலாளர்களின் நிலவரம் என்றால், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வேலை செய்ய வந்திருக்கும் தொழிலாளர்களின் அவலம் இன்னும் மோசமானது. இவர்களுக்காகவே டார்மிட்ரியை(தங்கும் விடுதிகள்) நிர்வாகம் கட்டியிருக்கிறது. அறைக்கு 8 தொழிலாளர்கள் வீதம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். உணவு, இருப்பிடம் சேர்த்து மாதந்தோறும் இவர்களது சம்பளத்திலிருந்து ரூபாய் 800 கழிக்கப்படுகிறது.

தொழிற்சாலையில் வழங்கப்படும் உணவு எந்தளவுக்கு மோசமாக இருக்க வேண்டுமோ அந்தளவுக்கு மோசமாக பரிமாறப்படுகிறது. கரப்பான் பூச்சி முதல் சிறு சிறு புழுக்கள் வரை அனைத்தையும் இந்த உணவில் பார்க்கலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். உணவுக்கான காண்டிராக்டை ஏற்றிருக்கும் கொடாக்ஸோ, நோக்கியா ஊழியர்களுக்கு தரமான உணவையும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு படு கேவலமான உணவையும் வழங்குவதாக குமுறலுடன் சொல்கிறார்கள். அசைவ சாப்பாடு கிடையவே கிடையாது என்பது ஒருபுறமிருக்க, சைவ சாப்பாடு அளவுடனேயே வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு கிராம் என்பதுதான் கணக்கு. அதைத்தாண்டி ஒரு பருக்கை அளவுக்குக் கூட உணவை வழங்குவதில்லை. மிக தாராள மனதுடன், ஷிப்ட் நேரத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உண்ணும் இந்த ‘ கரப்பான் பூச்சி வாழும் கிராம்’ உணவுக்கு நிர்வாகம் எந்தவிதமான கட்டணத்தையும் அவர்களது சம்பளத்திலிருந்து வசூலிப்பதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதேபோல் இத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நேரத்தில் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துக்குக் கூட எந்த மருத்துவரையும் நிர்வாகம் நியமிக்கவில்லை. வார்டு பாய் போன்ற ஒருவரும், நர்ஸ் ஒருவரும் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு… என சகலத்துக்கும் ஒரே மாத்திரையைத்தான் இவர்கள் தருகிறார்களாம்.

நோக்கியா சுரண்டலுக்கு அடியாள் வேலை செய்யும் தி.மு.க!

இவையனைத்தையும் எதிர்த்தும், பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கேட்டும் கடந்த ஆண்டு சென்னையிலுள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடினார்கள். தி.மு.க.வை சேர்ந்த தொழிலாளர் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன் – காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க செயலாளரும் கூட – தலைமையில் நிர்வாகம் நடத்திய கட்டப் பஞ்சாயத்தில் தொழிலாளர்களின் போராட்டம் கொடூரமாக ஒடுக்கப்பட்டதுடன், முன்னின்று போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகமும், தா.மோ.அன்பரசனும் வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், இந்த வாக்குறுதி மாதங்கள் பல கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த கட்டப்பஞ்சாயத்து ஒடுக்கியது. இந்த போராட்ட விபரங்கள் எதுவும் வெளியுலகுக்கு தெரியாது. அப்படி தெரியாதபடி நிர்வாகமும், தி.மு.க. அமைச்சரும் பார்த்துக் கொண்டார்கள்.

இந்த அடக்குமுறைக்கு பணிவதைத் தவிர இத்தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதான எண்ணத்தை நிர்வாகம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பமும் ஏற்படுத்தியிருக்கிறது. தங்கைக்கு திருமணம், தம்பியின் கல்வி, அக்கா மகளுக்கு காது குத்தல், திருமணத்துக்கான வரதட்சணை, நகை சேகரிப்பு… என ஒவ்வொரு தொழிலாளியையும் அழுத்தும் பிரச்னைகளுக்கும் குறைவில்லை.

வெளியூரில் வசிக்கும் தொழிலாளியின் குடும்பங்கள், நோக்கியா செல்ஃபோன் மூலமாகவே இவர்களை தொடர்பு கொள்கிறார்கள். பேசுகிறார்கள். குடும்பத்தின் சுக, துக்கங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், தாங்கள் பயன்படுத்தும் நோக்கியா செல்ஃபோன் வழியே யாரிடம் பேசுகிறோமோ அவரது ரத்தம்தான் அதே ஃபோனில் கலந்திருக்கிறது என்ற உண்மை மட்டும் குடும்பத்தினருக்கு தெரிவதேயில்லை.

ஆமாம், இந்தத் தொழிலாளர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்.

சென்னையில் ஒரு போபால்?

இந்த பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடூரத்துக்கு வருவோம்.

விஷவாயு கசிந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டது சைட் 3இல். அதாவது அசெம்பிளிங் செக்ஷனில். இந்தப் பிரிவு இத்தொழிற்சாலை இயங்க ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே ‘எதன் காரணமாகவோ’ மூடப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புவரை இந்தப் பிரிவு செயல்படாமல் ‘சும்மா’தான் இருந்தது. ‘பராமரிப்பு’ வேலைகள் நடப்பதாக நிர்வாகம் சொன்னது. அதன்பின், கடந்த மே மாதம் முதல் இந்தப் பிரிவு இயங்க ஆரம்பித்தது. இப்போது விஷவாயு கசிந்து 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுவே தொழிலாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எதனால் இந்தப் பிரிவை மூடி வைத்தார்கள்? இடைப்பட்ட காலத்தில் என்ன பராமரிப்பு செய்தார்கள்? பராமரிப்பு சரியாக இருப்பதாக யார் சொன்னதன் பேரில் இப்போது திறந்திருக்கிறார்கள்? இங்கு என்ன விதமான ரசாயன வாயு பயன்படுத்தப்படுகிறது? அது கசிந்தால் என்ன தற்காப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கூடவா நிர்வாகத்துக்கு தெரியாது?

தொடரும் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பே சனிக்கிழமை இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்தி ‘ஒரு உண்மையை’ கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழை பெறவே இல்லையாம்! எனவே சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே தொழிற்சாலையை இயக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்!

அடப்பாவிகளா, 5 ஆண்டுகளாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சான்றிதழ் பெறாமலேயே இயங்கி வந்திருக்கிறது என்று கூடவா தெரியாமல் இருந்திருக்கிறார்கள்? ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள்? இதுதான் தமிழகம் ஒளிரும் பட்சணமா?

இந்த அயோக்கியத்தனம் ஒருபுறம் இருக்க, இதன் மறுபுறம் அழுகி சீழ்வடியும் இந்த அமைப்பின் வீக்கத்தில் இருக்கிறது. அதாவது விஷவாயு கசிவு என்பதையே திட்டமிட்டு மூடிமறைத்து ஏதோ சான்றிதழ் பெறவில்லை என்பதான பிம்பத்தை தோற்றுவிக்க ஃபாக்ஸ்கான் நிர்வாகமும், ஆளும் தி.மு.க. அரசும் முயல்கிறது.

உலகமயமாக்கலின் அதிகபட்ச கொடுமை இதுதான். உற்பத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உற்பத்தி கருவியை பயன்படுத்துகிறோம், எந்தவிதமான ரசாயனங்கள் அதில் கலந்திருக்கின்றன, இந்த ரசாயனங்களை கையாள்வதால் என்னவிதமான நோய்களால் தாங்கள் பாதிக்கப்படுவோம், இதில் குறுகிய காலத்தில் என்ன நோய்வரும், நீண்ட காலத்தில் என்ன பாதிப்பு வரும், இதற்கு மாற்று மருந்தாக எதை உண்ண வேண்டும்…. ஆகிய அனைத்தும் மறைக்க; மறுக்கப்படுகின்றன.

சென்னை நோக்கியா – ஃபாக்ஸ்கான் – தொழிற்சாலையில் நடந்திருக்கும் இந்த விஷவாயு கசிவு ஒரு விபத்தல்ல. தொழிலாளர்களின் உயிரை பணயம் வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் தொழில். இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர் போபாலில் என்ன நடந்ததோ அதுவே இங்கேயும் நடக்கிறது. போபாலில் நகரத்து மக்கள் அனைவரும் வதைபட்டார்கள். இங்கே அது தொழிலாளிகளுக்கு மட்டும் நடக்கிறது.

இன்றும் ராமச்சந்திரா அவசர சிகிச்சை பிரிவில் பல தொழிலாளர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 25.7.2010 அன்று இதே மருத்துவமனைக்கு மூப்பனாரின் தம்பியைப் பார்க்க வந்த கருணாநிதி இந்த தொழிலாளர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சென்னையை சுற்றியுள்ள புறநகரங்களில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் எல்லா முறைகேடுகளோடும் இயங்குவதற்கான அனுமதியை தி.மு.கதான் வழங்கியிருக்கிறது. இதற்கான ஆதாயத்தை வட்டம் முதல் அமைச்சர் வரை பெறுகிறார்கள். அவர்கள் பெறும் ஆதாயம் என்பது கோடிகளில் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த விபத்தை மறைப்பதற்கு நிர்வாகத்தோடு தி.மு.க உள்ளூர் தலைவர்களும் மும்மூரமாக ஈடுபட்டிருந்ததை நேரிலேயே பார்த்தோம். ஆம்புலன்சுகளோடு தி.மு.க கொடி ஏந்திய வண்டிகளும் அன்று பூந்தமல்லி சாலையை நிறைத்திருந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக வந்திருந்த தொழிலாளர்களை அப்புறப்படுத்துவதில் தி.மு.க தலைவர்கள் முன்னணி வகித்தனர்.

நோக்கியாவின் காலன் ட்யூன்!

நோக்கியா ஃபோனை பயன்படுத்தாதவர் யாருமில்லை. நமது துக்கம், மகிழ்ச்சி, காதல், நட்பு, அரட்டை அனைத்தும் இந்த சிறிய கருவியை வைத்தே இயங்குகின்றன. புகழ்பெற்ற நோக்கியா காலர் ட்யூனை மனப்பாடம் செய்யாதவர் யாருமில்லை. ஆனால் இந்த இனிமையான எலக்ட்ரானிக் பொருளின் பின்னேதான் இத்தகைய சுரண்டலும், தொழிலாளிகளின் இரத்தமும் கலந்திருக்கிறது. சில ஆயிரங்களுக்காக தமது உயிரையும், ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.

கேமரா உள்ள ஒரு செல்பேசியின் விலை கூட இங்கு தொழிலாளிக்கு சம்பளமாகத் தரப்படவில்லை. இப்படியான கடும் சுரண்டலின்றி பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரமான இலாபம் என்பது சாத்தியமில்லை. இவர்களை இந்தியாவை விட்டு விரட்டாதவரை நமக்கும் விடுதலை இல்லை. அது வரை இந்த தொழிலாளிகள் மெல்ல மெல்ல இறந்து கொண்டுதான் நமக்கான செல்பேசிகளை தயாரிக்க வேண்டும்.

நினைவுகள் அழுத்த செல்பேசியை பார்த்தபடியே ராமச்சந்திரா மருத்துவமனையை விட்டு அகன்றோம். அப்போதும் ஒரு ஆம்புலன்ஸ் இறைந்தபடியே ஒரு பெண்தொழிலாளியோடு வந்திறங்கியது. அந்த ஆம்புலன்சின் சத்தம் ஒரு சுடுகாட்டின் ஒலிபோல இன்னமும் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. இனி செல்பேசியின் காலர் ட்யூனைக்கேட்கும் போது அது காலன் ட்யூனாகத்தான் உணருவோம்.

காலனை தொழிலாளிகள் எதிர்கொண்டு வதம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறோம்.